காவிரி ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

காவிரி தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கு இறுதி விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்தது. 

காவிரி தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கு இறுதி விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்தது. 
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 21-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.
அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி முன் வைத்த வாதம்: 
காவிரி தொடர்பாக மைசூர் திவானுக்கும், அப்போதைய மதராஸ் மகாணத்துக்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லும். கர்நாடகம் தற்போது கூறுவது போல கையெழுத்தான ஒப்பந்தங்கள் அப்போதைய ஆங்கிலேயர்களின் 'பாரமெளன்ஸி' அதிகாரத்தால் கட்டாயப்படுத்தப்படவில்லை. காவிரி ஒப்பந்தங்கள் நன்கு ஆலோசிக்கப்பட்டு, பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டு, தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு, குறிப்பாக மைசூரின் விருப்பத்தின் பேரிலேயே 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது தொடர்பாக திவானுக்கும், அப்போதைய மதராஸ் மகாண கவுன்சில் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து உள்ளிட்ட ஆதாரங்கள் உள்ளன. ஒப்பந்தம் தொடர்பாக அப்போதைய மைசூர் திவானுக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்கப்படவில்லை. இரு தரப்பினரும் கலந்து பேசி, சுமுகமாகவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று 1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு விடுதலை பெற்ற இரண்டு ஆண்டுக்குள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கையெழுத்தான காவிரி தொடர்பான ஒப்பந்தங்கள் முடிவடைந்து விட்டன என மைசூர் மகாராஜா கூறியிருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவே, ஒப்பந்தங்கள் செல்லாது எனக் கர்நாடகம் தற்போது கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 1919-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம், 1947-ஆம் ஆண்டு இந்திய விடுதலைச் சட்டம், 1956-ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின்படி காவிரி தொடர்பான ஒப்பந்தங்கள் செல்லும்' என ராகேஷ் துவிவேதி வாதிட்டார்.
அவரது வாதங்களைப் பதிவு செய்து கொண்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (செப்டம்பர் 6) ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com