மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் இன்று முறைப்படி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு


புது தில்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் இன்று முறைப்படி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, மத்திய இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு கேபினட் அந்தஸ்துடன், பாதுகாப்புத் துறை தரப்பட்டது. 

நாட்டின் முதல் முழுநேர பாதுகாப்புத் துறை அமைச்சராக, நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அலுவலகத்தில் முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருடன் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடன் இருந்தார்.

பாதுகாப்புத் துறையைக் கூடுதலாகக் கவனித்து வந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜப்பானில் நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை இரவு, டோக்யோ சென்றிருந்தார். 

ஜப்பானில் இருந்து அவர் தாயகம் திரும்பிய பிறகு, பாதுகாப்புத் துறையின் பொறுப்பை நிர்மலா சீதாராமன் இன்று ஏற்றுக் கொண்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்திரா காந்திக்குப் பிறகு, பாதுகாப்புத் துறையின் அமைச்சராகியுள்ள இரண்டாவது பெண் இவர். சர்வதேச நாடுகளின் அரசியல் செயல்பாடுகளும், பிராந்திய அளவின பாதுகாப்பு அம்சங்களும் மாறி வருவதால், ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் போர்த்திறனை வலுப்படுத்த வேண்டியது உள்ளிட்ட சவால்களை நிர்மலா சீதாராமன் எதிர்கொள்ளவிருக்கிறார். மேலும், முப்படைகளை நவீனப்படுத்தும் பணியையும் அவர் விரைவுபடுத்த வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com