அமைச்சர் மகள் வெளிநாட்டில் படிக்க அரசு உதவித்தொகை: மகாராஷ்டிரத்தில் பரபரப்பு

மகாராஷ்டிரத்தில் அரசு உதவியுடன் வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியலில் மாநில அமைச்சரின் மகள், இரு அரசு உயரதிகாரிகளின் மகன்களின் பெயர் இடம் பெற்றுள்ளது பெரும்

மகாராஷ்டிரத்தில் அரசு உதவியுடன் வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியலில் மாநில அமைச்சரின் மகள், இரு அரசு உயரதிகாரிகளின் மகன்களின் பெயர் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர அரசு சார்பில் ஆண்டுதோறும் வெளிநாட்டில் படிக்க தகுதியுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், ஒருமுறை சென்று வருவதற்கான விமானக் கட்டணம், கல்விக் கட்டணம், தங்குமிடத்துக்கான செலவு உள்ளிட்டவை உதவித்தொகையாக கிடைக்கும்.
இந்த ஆண்டுக்கு இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்ற மாணவர்கள் பட்டியலில் மகாராஷ்டிர மாநில சமூக நீதித் துறை அமைச்சர் ராஜ்குமார் பதோலியின் மகள் ஸ்ருதி, மாநில அரசு உயரதிகாரிகள் இருவரது மகன்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கான உதவித்தொகையை வசதி படைத்த அமைச்சர், அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் வழங்குவதா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் மாநில அரசும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமைச்சர் ராஜ்குமாரை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் ராஜ்குமார் கூறியதாவது:
எனது மகள் வெளிநாட்டில் கல்வி பயில உதவித்தொகை பெறும் விஷயத்தில் எனக்கு எந்த பங்கும் கிடையாது. அவர் முறைப்படி விண்ணப்பித்துதான் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளார். கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களைத் தேர்வு செய்யும் குழுவிலும் நான் இடம் பெறவில்லை. 
இது தொடர்பாக முதல்வரிடம் விளக்கமளித்துள்ளேன். அரசு அளிக்கும் உதவித்தொகையை பெறுவதா? வேண்டாமா? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com