பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-ஜப்பான் முடிவு

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும், ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும், ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஜப்பான் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்சுனோரி ஒனோடிராவை டோக்கியோவில் சந்தித்துப் பேசினார். இந்திய-ஜப்பான் இடையே ஆண்டுதோறும் நடைபெறும் அமைச்சர் நிலையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன் பிறகு இரு தலைவர்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்மையில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. தென்சீன கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்று இந்தியாவும், ஐப்பானும் முடிவு செய்துள்ளன. பாதுகாப்புத் துறையில், முக்கியமாக ராணுவ ஆயுதத் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது.
இது தவிர ராணுவத்துக்கு நவீன ஆயுதங்களைத் தயாரிப்பதிலும், ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை இணைந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிடம் இருந்து கடற்படைக்காக யுஎஸ்2 சின்மேவா விமானங்களை இந்தியா வாங்க இருக்கிறது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டே இது தொடர்பாக ஜப்பானை குற்றம்சாட்டிய சீனா, இந்தியாவுக்கு குறைந்த விலையில் விமானங்களை விற்க இருப்பதாகக் கூறியிருந்தது.
பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு மட்டுமல்லாது பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படவும், இரு நாட்டு முப்படைகளிடையே தொடர்ந்து பாதுகாப்பு பயற்சி மேற்கொள்ளவும் இந்தியாவும், ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன. எதிர்காலத்தில் பாதுகாப்புத் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் ஜேட்லியும், இட்சுனோரியும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்திய கடற்படை வீரர்களுக்கு நீர்மூழ்கிக் கப்பலை எதிர்கொள்வது உள்பட பல்வேறு பயிற்சிகளை அளிக்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.
அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டபோது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதா ராமனுக்கு ஒதுக்கப்பட்டது. எனினும், அவர் முறைப்படி இன்னும் பதவியேற்கவில்லை என்பதால், அப்பொறுப்பை கூடுதலாக வகித்து வரும் அருண் ஜேட்லி, ஜப்பானுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பரில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com