பெயர் குறிப்பிடப்படாத அமைப்புகளிடம் இருந்து பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ரூ.646 கோடி நிதி: புதிய தகவல்

கடந்த 2016-ஆம் நிதியாண்டில், பெயர் குறிப்பிடப்படாத அமைப்புகள் அல்லது தனி நபர்களிடம் இருந்து பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ரூ.646.82 கோடி நிதி அளிக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.

கடந்த 2016-ஆம் நிதியாண்டில், பெயர் குறிப்பிடப்படாத அமைப்புகள் அல்லது தனி நபர்களிடம் இருந்து பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ரூ.646.82 கோடி நிதி அளிக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.
இது அந்த 2 அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த நிதியில் 77 சதவீதமாகும்.
'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு' என்ற அமைப்பு, அரசியல் கட்சிகளுக்கு கடந்த 2015-16ஆம் நிதியாண்டில் அளிக்கப்பட்ட நிதி விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 2015-16ஆம் நிதியாண்டில், பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கு மொத்தம் ரூ.1,033.18 கோடி நிதியளிக்கப்பட்டுள்ளது. 
7 தேசிய அரசியல் கட்சிகளும் தங்களுக்கு கிடைத்த நிதியில், ரூ.754.45 கோடியை செலவு செய்திருப்பதாகவும், ரூ.278.73 கோடி செலவிடப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளன.
7 தேசிய கட்சிகளில், பாஜகவுக்குதான் மிக அதிகமாக ரூ.570.86 கோடி நிதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து காங்கிரஸுக்கு ரூ.261.56 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.107.48 கோடி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.47.39 கோடி, திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ.34.58 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.9.14 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.2.18 கோடியும் நிதி கிடைத்துள்ளது. 
இந்த நிதியில், பாஜக 23 சதவீதத்தை செலவிடவில்லை. காங்கிரஸ் கட்சி 26 சதவீத நிதியை செலவிடவில்லை.
கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.970.43 கோடி நிதி கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.593.31 கோடி நிதி கிடைத்தது. அத்துடன் தற்போது கிடைத்த நிதியை ஒப்பிடும்போது, பாஜகவுக்கு கிடைத்த நிதியின் அளவு 41 சதவீதமும், காங்கிரஸுக்கு கிடைத்த நிதியின் அளவு 56 சதவீதமும் குறைந்துள்ளது.
ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்படும்போது, அதை அளிப்போரின் விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான தொகையில் நிதியளிப்போர் அந்த விவரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. இவ்வாறு பெறப்படும் நிதி, பெயர் குறிப்பிடப்படாத அமைப்புகள் அல்லது தனிநபர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியாகக் கருதப்படும். இதன்கீழ், பாஜகவுக்கு ரூ.460.78 கோடியும், காங்கிரஸுக்கு ரூ.186.04 கோடியும் நிதி அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு கிடைத்த நிதியில், ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான தொகையில் நன்கொடைகளாக ரூ.536.41 கோடி அளிக்கப்பட்டிருக்கிறது. இதே தொகை, காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 167.96 கோடியாகும்.
அதேநேரத்தில், ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையில் அளிக்கப்பட்ட நிதியில், பாஜகவுக்கு ரூ76.85 கோடியும், காங்கிரஸுக்கு ரூ.20.42 கோடியும் மட்டுமே அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தேர்தல் ஆணையத்திடம் மேற்கண்ட அரசியல் கட்சிகள் அளித்த 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவு கணக்கை ஆய்வு செய்ததில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com