ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமன நடைமுறை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர், ஆணையர் நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர், ஆணையர் நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக உள்ள கே.வி. செளதரி, ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம்.பாசின் ஆகியோரது நியமனத்தை எதிர்த்து தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
அதில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அந்த இருவரையும் ஊழல் கண்காணிப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் நியமித்தது தவறு. அவர்களை நியமிப்பதற்கு முன்பு ஊழல் கண்காணிப்பு ஆணையம் உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்று அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.எம். சதானந்தகெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், ஆணையர் நியமனம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். இப்பதவிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களில் இருந்து ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்யும் நடைமுறை சரியாக இருக்காது. மொத்தம் 10 பேர் மட்டும் விண்ணபித்தார்கள் என்றால் அவர்களில் இருந்து ஒருவரைதான் தேர்வு செய்வீர்களா?
பதவிக்கு விண்ணப்பம் செய்யாத, அதே நேரத்தில் இப்பொறுப்புகளுக்கு முழுத்தகுதி வாய்ந்த பலர் நாட்டில் உள்ளனர். எனவே, ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர், ஆணையர் பதவிக்கான நியமனத்துக்கு குறுகிய வரையறையை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள். இதுபோன்ற நியமனங்கள் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் கூறியதாவது:
இதுபோன்ற பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவது வழக்கமாக உள்ளது. இப்போதைய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர், ஆணையர் குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் நற்சான்று அளித்த பிறகுதான் இந்த நியமனம் நடைபெற்றது என்றனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், 'நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டபோது வருமான வரித் துறை மூத்த அதிகாரியாக இருந்த செளதரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார். ஆனால், செளதரி தரப்பு வழக்குரைஞர் இதற்கு மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com