பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைவராக விவேக் கோயங்கா தேர்வு

நாட்டின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் (பிடிஐ) தலைவராக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர்

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் (பிடிஐ) தலைவராக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் விவேக் கோயங்காவும், துணைத் தலைவராக தி ஹிந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ரவியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிடிஐ நிறுவனத்தின் 69-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தில்லியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் அடுத்த தலைவர், துணைத் தலைவர், இயக்குனர்கள் குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில், நிறுவனத்தின் தலைவராக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மேலாண் இயக்குநர் விவேக் கோயங்காவும், துணைத் தலைவராக தி ஹிந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ரவியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் பதவியை வகித்து வந்த மனோரமா குழுமத்தின் மூத்த துணை ஆசிரியரான ரியாத் மேத்யூயை அடுத்து, அப்பதவிக்கு விவேக் கோயங்கா (60) வந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வெளியீட்டாளராக இருக்கிறார். அந்தக் குழுமம் சார்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்களும், மராத்தி மொழி நாளிதழான லோக் சத்தா, இந்தி மொழி நாளிதழான ஜன்சத்தா ஆகியவையும் நடத்தப்படுகின்றன. தவிர வெவ்வேறு மொழிகளில் செய்தி இணையதளங்களும் நடத்தப்படுகின்றன.

இந்திய செய்தித்தாள் சங்கத்தின் (ஐஎன்எஸ்) அமைப்பின் இயக்குநராகவும், விளம்பரச் சங்கத்தின் இந்தியப் பிரிவு தலைவராகவும் அவர் இருக்கிறார். ஏற்கெனவே யூஎன்ஐ செய்தி நிறுவனத்தின் தலைவராகவும் விவேக் கோயங்கா பதவி வகித்துள்ளார். அவர் வன உயிரியல் புகைப்பட நிபுணராவார்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்.ரவி (69), விருது பெற்ற முன்னாள் பத்திரிகையாளராவார். அவர் கடந்த 1972-இல் தி ஹிந்து நாளிதழில் நிருபராகப் பணியில் இணைந்தார். அப்பத்திரிகையின் வாஷிங்டன் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். 1980-இல் ஹிந்துவின் துணை ஆசிரியராகப் பதவியேற்றார். 1991 முதல் 2011 வரை அப்பத்திரிகையின் ஆசிரியராகவும், 2013 அக்டோபர் முதல் 2015 ஜனவரி வரை தலைமை ஆசிரியராகவும் பதவி வகித்தார்.

தனது 42 ஆண்டுகால பத்திரிகையுலகப் பணியில் அவர் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றதோடு, பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களுடன் வெளிநாட்டுப் பயணங்களும் சென்றுள்ளார். என்.ரவி, சட்டப் படிப்பில் பட்டமும், பொருளாதாரப் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் ஆவார். அவர் ஏற்கெனவே பிடிஐ நிறுவனத்தின் தலைவராகவும், எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்திய அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராக 2006 முதல் 2008 வரை பதவி வகித்துள்ளார்.

ஜி.கே.ரெட்டி நினைவு விருது, பிரெட் ரோல் மாடல் விருது உள்ளிட்ட விருதுகளையும், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தையும் என்.ரவி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விவேக் கோயங்கா, என்.ரவி, மேத்யூ ஆகியோரைத் தவிர, பிடிஐ இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர்களாக ஆர்.லட்சுமிபதி (தினமலர்), மோகன் குப்தா (தைனிக் ஜாக்ரண்), கே.என்.சாந்திகுமார் (டெக்கான் ஹெரால்டு), வினீத் ஜெயின் (டைம்ஸ் ஆஃப் இந்தியா), அவீக் குமார் சர்க்கார் (ஆனந்த பஜார் பத்திரிகா), எம்.பி.வீரேந்திரகுமார் (மாத்ருபூமி), விஜய்குமார் சோப்ரா (தி ஹிந்த் சமாச்சார் லிட்), ராஜீவ் வர்மா (ஹிந்துஸ்தான் டைம்ஸ்), ஹோர்முஸ்ஜி என்.காமா (பாம்பே சமாச்சார்), நீதிபதி ஆர்.சி.லஹோட்டி, பேராசிரியர் தீபக் நய்யார், ஷியாம் சரண், ஜே.எஃப்.போச்கானாவாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தலைவர் பதவியில் இருந்து விலகும் ரியாத் மேத்யூ, பிடிஐ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்குதாரர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "2016-17-ஆம் நிதியாண்டில் நமது நிறுவனம் ரூ.172.76 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டு வருவாயான ரூ.166.36 கோடியை விட ரூ.6.4 கோடி அதிகமாகும். தனது உண்மை அடிப்படையிலான செய்திகளின் மூலம் பிடிஐ நிறுவனம், நாட்டிலேயே மிகச் சிறந்த செய்தி நிறுவனம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com