சமூகத்தை பிளவுபடுத்தும் வேலையில் பாஜகவும், மோடியும் ஈடுபட்டு வருகின்றனர்: ராகுல் காந்தி தாக்கு

சமூகத்தை பிளவுபடுத்தும் வேலையில், பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் நாந்தேட் நகரை அடுத்த பர்பணி பகுதியில் விவசாயிகளுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
மகாராஷ்டிர மாநிலத்தின் நாந்தேட் நகரை அடுத்த பர்பணி பகுதியில் விவசாயிகளுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

சமூகத்தை பிளவுபடுத்தும் வேலையில், பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டும் நோக்கத்துடனேயே, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக முதலில் அவர்கள் (பிரதமர் மோடி, பாஜக) தெரிவித்தனர். பிறகு, கருப்புப் பண புழக்கத்துக்கு முடிவு கட்ட கொண்டு வரப்பட்டதாக கூறினர். ஆனால், உண்மையில் 90 சதவீத கருப்புப் பணம், ரியல் எஸ்டேட் துறையிலும், தங்கத்திலும் முதலீடு செய்யப்பட்டிருப்பதை மக்கள் நன்கு அறிவர். இதன் மீது நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகள், ஏழைத் தொழிலாளர்கள், தாய்மார்கள் சேமித்து வைத்த பணத்துக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை, 100 சதவீதம் தோல்வியில்தான் முடிந்துள்ளது.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்த முடிவினால், நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப் பணத்தின் மொத்த மதிப்பை அரசு தெரிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாங்கள் வலியுறுத்தினோம். இதையடுத்து, செல்லாத ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் கரூவூலத்துக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி ஓராண்டு காலத்தை எடுத்துக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்ததற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடிதான் இதற்கு பொறுப்பாவார். உயர்மதிப்பு ரூபாய் மதிப்பிழப்பு முடிவானது, இந்தியாவில் உள்ள திருடர்கள், தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்குதான் உதவியது என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியும்.
மத்தியில் ஆட்சியைப் தக்க வைப்பதற்காக, சமூகத்தைப் பிளவுப்படுத்தும் பணியில் பிரதமர் மோடியும், பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹரியாணா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினருக்கும், ஜாட் அல்லாத சமூகத்தினருக்கும் இடையே மோதலை தூண்டிவிட்டனர். மகாராஷ்டிரத்தில், மராத்தியர்களுக்கும், மராத்தியர் அல்லாத சமூகத்தினருக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தினர். அவர்களது ஒரே நோக்கமானது, பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே ஆகும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்துக் கொண்டு, கோவாவிலும், மணிப்பூரிலும் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை கொடுத்து அவர்கள் வாங்கினர். இதேபோல், குஜராத்திலும் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை கொடுத்தும் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றிரண்டு தேர்தல் வரையிலும் போட்டியிடுவார்கள். அதன்பிறகு காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கும். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் சித்தாந்த ரீதியில் எதிர்க்கும்.
2 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று பிரதமர் வாக்குறுதி அளித்தார். இதுகுறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து தெரிவித்தபோது, வெறும் 2 லட்சம் பேருக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பு அளித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கையானது தற்போது பூஜ்யமாக குறைந்துவிட்டது. ஜிஎஸ்டி சட்டத்துக்கு மோடி அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், ஜிஎஸ்டி சட்டத்துக்கு அடித்தளமிட்டது காங்கிரஸ்தான் என்று ராகுல் காந்தி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com