ரூபாய் நோட்டு வாபஸ் தவறான முடிவு என்று ஒப்புக் கொள்ள தைரியம் உள்ளதா?

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஒரு தவறான முடிவு என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளதா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்
ரூபாய் நோட்டு வாபஸ் தவறான முடிவு என்று ஒப்புக் கொள்ள தைரியம் உள்ளதா?

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஒரு தவறான முடிவு என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளதா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நமது பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைதான் காரணம். இந்த நடவடிக்கையின் விளைவாக 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோனதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 1.4 சதவீதம் என்ற அளவுக்கு சரிவு ஏற்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
ஒரு தவறான முடிவை எடுப்பதற்கு தைரியம் தேவையில்லை. ஆனால், "நான் ஒரு தவறான முடிவை எடுத்தேன்' என்று ஒப்புக் கொள்வதற்கு தைரியம் தேவை. ரூபாய் நோட்டு வாபஸ் என்பது தவறான முடிவாகும். "அந்தத் தவறை நான் செய்து விட்டேன்' என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் பிரதமருக்கு இருந்திருக்க வேண்டும்.
வேலைவாய்ப்புகள் எங்கே உருவாக்கப்பட்டன? மறைமுகமாக மத்திய அரசு தனது தோல்விகளை ஒப்புக் கொண்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நீக்கப்பட்டார். திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நீக்கப்பட்டார். இதற்கு திறன் மேம்பாட்டு லட்சியமும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் தோல்வியடைந்து விட்டது என்றுதான் அர்த்தம். தொழிலாளர் நலக் கொள்கைகள் தோல்வியடைந்ததால்தான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார்.
நாடு தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசின் தவறான கொள்கைகளின் சுமையை இளைஞர்கள் அனுபவித்து வருகின்றனர். ஆண்டுதோறும் 1.2 கோடி பேர் வேலைவாய்ப்புக்குத் தயாராகின்றனர். ஆனால் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது மேலும் பல அமைச்சர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக வேளாண்துறையில் ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து அத்துறை அமைச்சரின் பதவியைப் பறித்திருக்க வேண்டும். அதேபோல் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
பொருளாதார நிலைமையை முன்வைத்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோருவீர்களா? என்று கேட்கிறீர்கள். பிரதமரை பதவி விலகுமாறு கோருவது சுலபமல்ல.
தொழில்துறை, திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை ஆகியவற்றின் கொள்கைகள் தோற்றுவிட்டன என்று கருதியதால்தான் அத்துறைகளை கவனித்து வந்த 3 அமைச்சர்களை பிரதமர் நீக்கியுள்ளார் என்றார் சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com