7 எம்.பி.க்கள், 98 எம்எல்ஏக்களுக்கு எதிராக விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் வரிவிதிப்பு வாரியம் தகவல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரில் 7 எம்.பி.க்கள், 98 எம்எல்ஏக்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில்
7 எம்.பி.க்கள், 98 எம்எல்ஏக்களுக்கு எதிராக விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் வரிவிதிப்பு வாரியம் தகவல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரில் 7 எம்.பி.க்கள், 98 எம்எல்ஏக்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அவர்களது பெயர்கள் அடங்கிய பட்டியலை செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.
ஒருவேளை அந்தப் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டால் அரசியல் அரங்கில் அது புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான "லோக் பிரகாரி' அமைப்பு, பல்வேறு எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் சொத்து பல மடங்கு உயர்ந்திருப்பதை அண்மையில் சுட்டிக் காட்டியது. வேட்புமனுத் தாக்கலின்போது சம்பந்தப்பட்ட நபர்கள் அளித்த சொத்து விவரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை அந்த தொண்டு நிறுவனம் முன்வைத்தது.
மொத்தம் 26 மக்களவை உறுப்பினர்கள், 11 மாநிலங்களவை உறுப்பினர்கள், 257 எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு எதிராக இப்புகார்கள் எழுப்பப்பட்டன. இதனிடையே, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அந்த அமைப்பு மனு தாக்கலும் செய்தது. சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் திடீரென இவ்வளவு சொத்துகள் வந்தது எப்படி? என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அந்த மனுவானது, நீதிபதி செலமேஸ்வரன் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டதாவது: இந்த விவகாரம் தொடர்பாக முதல்கட்ட விசாரணையை வரிவிதிப்பு வாரியம் முன்னெடுத்துள்ளது. 7 எம்.பி.க்கள், 98 எம்எல்ஏக்களின் வருமானமும், சொத்துகளும் கணிசமாக உயர்ந்திருப்பது அதில் கண்டறியப்பட்டுள்ளது. அதுதொடர்பான ஆதாரங்களும், முகாந்திரங்களும் விசாரணையில் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
அவர்களைத் தவிர 9 மக்களவை உறுப்பினர்கள், 11 மாநிலங்களவை உறுப்பினர்கள், 42 எம்எல்ஏக்களின் சொத்துகளின் மதிப்பும் கணக்கிடப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரது பெயர்களும் அடங்கிய பட்டியலை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்வோம் என்றார் அவர்.
விசாரணைக்கு உட்படுத்தப்படும் மக்கள் பிரதிநிதிகள் எந்தெந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தற்போது தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் சமர்ப்பிக்கப் போகும் பட்டியலில் அந்தத் தகவல்கள் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.
அந்த எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் பெயர்கள் வெளிப்படையாகத் தெரியவரும் பட்சத்தில் அது, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயர்கள் மட்டும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் சரி; பாஜக உறுப்பினர்கள் பெயர்கள் இருந்தாலும் சரி, இரண்டுமே மத்திய அரசின் மீது விமர்சனங்களை முன்வைக்கக் காரணமாகக்கூடும்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வரன் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது.
மக்கள் பிரதிநிதிகளின் சொத்துகள் கணிசமாக உயர்ந்தது தொடர்பாக விசாரிக்க இதுவரை ஏதேனும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளதா? என்று நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்தே, திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது இத்தகைய விளக்கங்களை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com