"பெரிய மனிதர்களிடம்' இருந்து கடனை வசூலிப்பது வங்கிகளுக்கு சவாலாக உள்ளது: அருண் ஜேட்லி

சமுதாயத்தில் "பெரிய மனிதர்கள்' என்று கூறப்படும் தொழிலதிபர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதுதான் வங்கிகளுக்கு கடுமையான சவாலாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
"பெரிய மனிதர்களிடம்' இருந்து கடனை வசூலிப்பது வங்கிகளுக்கு சவாலாக உள்ளது: அருண் ஜேட்லி

சமுதாயத்தில் "பெரிய மனிதர்கள்' என்று கூறப்படும் தொழிலதிபர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதுதான் வங்கிகளுக்கு கடுமையான சவாலாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அருண் ஜேட்லி கூறியதாவது:
விவசாயம், சிறு தொழில்களுக்காக சிறிய அளவில் கடன் பெறுவோர் அதனை திருப்பிச் செலுத்தாவிட்டால் வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், சமுதாயத்தில் "பெரிய மனிதர்கள்' என்று கூறப்படும் தொழிலதிபர்கள் பலர் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தாததுதான், நமது நாட்டில் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. அவர்களிடம் கொடுத்த கடனை திரும்பப் பெறுவது என்பது வங்கிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
விவசாயிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்புக்கு கடன் கொடுப்பதன் மூலம் வங்கிகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், கடனை வாங்குபவர்கள் அதனை முறையாகத் திருப்பிச் செலுத்தத் தவறினால், வங்கிகளின் கடன் கொடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இது நாட்டின் வளர்ச்சியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இப்போது முதல்முறையாக வங்கிகளிடம் பெருமளவில் கடனைப் பெற்றுக் கொண்டு திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் முயற்சியில் அரசும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்படும் பணம் கிராமப்புற மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.
புணே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நூறாண்டு காலமாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சிறந்த வங்கிகள் நாட்டின் பிற பகுதிகளிலும் உருவாக வேண்டும் என்றார் ஜேட்லி.
புணே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் 50 ஆண்டுகளாகப் பங்களித்து வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் பேசுகையில், "புணே மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் வாராக் கடன் பிரச்னை ஏற்பட்டதில்லை. எங்கள் வங்கி விவசாயிகள், பால் பண்ணை தொழில் செய்பவர்களுக்குதான் அதிகம் கடன் வழங்கியுள்ளது' என்றார்.
சரத் பவாரை புகழ்ந்து அருண் ஜேட்லி பேசியதாவது: மகாராஷ்டிரத்தில் வேளாண் துறையில் சரத் பவார் சிறப்பாக பங்களித்துள்ளார். கட்சி வேறுபாடுகளை மறந்து தேச நலன் கருதி அரசுக்கு அவர் பல்வேறு வகைகளில் ஒத்துழைத்து வருகிறார் என்றார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com