பரஸ்பர விவாகரத்துக்கு 6 மாத அவகாசம் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் விவாகரத்து (மணமுறிவுக்கு) கோரும் தம்பதிகளுக்கு, அதுகுறித்து யோசிப்பதற்கு 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை
பரஸ்பர விவாகரத்துக்கு 6 மாத அவகாசம் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் விவாகரத்து (மணமுறிவுக்கு) கோரும் தம்பதிகளுக்கு, அதுகுறித்து யோசிப்பதற்கு 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1955-ஆம் ஆண்டு ஹிந்து திருமணச் சட்டத்தில், பரஸ்பர மனமுறிவு கோரும் தம்பதிகளுக்கு, அவர்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து யோசிப்பது உள்ளிட்டவற்றுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடும்ப நல நீதிமன்றங்களில் தற்போது பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யும் தம்பதிகளுக்கு அவர்களை சேர்த்து வைக்கும் கடைசி முயற்சியாக, விவாகரத்து குறித்து யோசிப்பதற்கு 6 மாத காலம் அவகாசம் தரப்படுகிறது. அந்த அவகாசம் முடிந்தபின்னரும், விவாகரத்து கோருவதில் தம்பதியினர் தீர்மானமாக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிடும். 6 மாத கால அவகாசத்தில், சேர்ந்து வாழ்க்கை நடத்துவது என்று தம்பதிகள் முடிவெடுக்கும்பட்சத்தில், பரஸ்பர விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்படும் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு தம்பதி இதுதொடர்பாக வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில், 'கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். மீண்டும் சேர்ந்து வாழ்க்கை நடத்த சாத்தியமில்லை. இதை கவனத்தில் கொண்டு, நீதிமன்றத்தால் பரஸ்பர விவாகரத்து அளிக்க வழங்கப்படும் 6 மாத கால அவகாசத்தை குறைத்து உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஹிந்து திருமணச் சட்டத்தின் 13 பி(2) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கால அவகாசம் என்பது கட்டாயமில்லை என்பதே எங்களது கருத்தாகும். இதுகுறித்து வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், உண்மைகள் அடிப்படையில் சுயேச்சையாக முடிவெடுக்கலாம். தம்பதியினர் மீண்டும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதற்கு சாத்தியமில்லை; மறுவாழ்வுக்கு இருவருக்கும் வேறு வாய்ப்புகள் உள்ளன என்பது தெரிந்தால், ஒவ்வொரு வழக்கிலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விசாரணை நீதிமன்றம் முடிவெடுக்கலாம்.

6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கால அளவை, தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றம் குறைத்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக விவாகரத்து கோரி விண்ணப்பிக்கும் தம்பதியினர், யோசனை நடத்துவதற்கு அளிக்கப்படும் கால அவகாசத்தை குறைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கு விசாரணையில், விவாகரத்து கோரும் தம்பதியினரின் பெற்றோர், வாரிசுகள் நேரில் ஆஜராக முடியவில்லையெனில், அதற்கு அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்காக வழக்கு விசாரணையை விடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றம் நடத்தலாம்.
மனமுறிவு தொடர்பாக தம்பதியினர் விரைந்து முடிவு எடுப்பதை தடுப்பதற்கே, அவர்களுக்கு யோசனை நடத்த 6 மாதம் அவகாசம் தரப்படுகிறது. திருமணப் பந்தத்தை காக்கவே பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில், தம்பதியினர் சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாது போனாலோ, அவர்களின் மறுவாழ்வுக்கு பிற வாய்ப்புகள் இருக்கும் பட்சத்திலோ, தம்பதியினர் தங்களது விருப்பத்தை தேர்வு செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் அளிப்பதே சரியானதாகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com