இந்தியாவில் வாரிசு அரசியல்: ராகுலுக்கு ரிஷி கபூர் கண்டனம்

இந்தியாவில் அரசியலில் மட்டுமின்றி, திரைப்படத் துறை, தொழில்துறையிலும் வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதாக உதாரணம் காட்டிப் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரபல ஹிந்தி நடிகர்

இந்தியாவில் அரசியலில் மட்டுமின்றி, திரைப்படத் துறை, தொழில்துறையிலும் வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதாக உதாரணம் காட்டிப் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரபல ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சந்தித்த ராகுல் காந்தியிடம், காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கமளித்த ராகுல் காந்தி, 'இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளில் இந்தப் பிரச்னை உள்ளது. 
எனினும், இந்தியாவை வாரிசு அரசியல்தான் நடத்தி வருகிறது. அரசியலில் மட்டுமன்றி திரைப்படத் துறை, தொழில் துறையில் கூட வாரிசுகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களின் திறமையை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, யாருடைய வாரிசு என்று ஆராய வேண்டிய அவசியம் இல்லை' என்று விளக்கமளித்தார். திரைத் துறையில் அபிஷேக் பச்சனை மட்டுமே ராகுல் காந்தி உதாரணமாகக் குறிப்பிட்டார். கபூர் குடும்பம் குறித்துப் பேசவில்லை. எனினும், இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) ரிஷி கபூர் கூறியிருப்பதாவது:
ராகுல் காந்தி அவர்களுக்கு, 106 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்திய திரைப்படத் துறையில் கபூர் குடும்பம் 90 ஆண்டுகளாக பங்களித்து வருகிறது. எங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையும் மக்களின் ஆதரவு மூலமும், தங்கள் திறமை மூலமும் திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளோம். எனவே, நீங்களும் உங்களது கடின உழைப்பின் மூலம் மக்களின் அன்பையும், மரியாதையையும் சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள். வாரிசு அரசியல்தான் இந்தியாவை வழி நடத்துவதாகக் கூறி மக்கள் மத்தியில் தவறான கருத்தைப் பரப்ப வேண்டாம் என்று ரிஷி கபூர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com