ராணுவ கூட்டுறவில் புதிய வியூகம்: இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ஜப்பான்

இந்தியாவுடன் பாதுகாப்புத் தறையில் ஒத்துழைப்பு நடவடிக்கையை மேம்படுத்துவதில் ஜப்பான் தீவிரம் காட்டி வருகிறது.
ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.
ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.

இந்தியாவுடன் பாதுகாப்புத் தறையில் ஒத்துழைப்பு நடவடிக்கையை மேம்படுத்துவதில் ஜப்பான் தீவிரம் காட்டி வருகிறது. ராணுவ கூட்டுறவில் புதிய வியூகம் வகுப்பதற்கும் இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் இடையேயான 12-ஆவது வருடாந்திர மாநாட்டில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
இந்திய-சீன எல்லையில் அமைந்துள்ள டோக்காலாம் பகுதிக்கு உரிமை கோரி, இரு நாடுகளுக்கு இடையே 74 நாள்களாக நீடித்து வந்த போர்ப் பதற்றம் அண்மையில் முடிவுக்கு வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் தூர கிழக்கு நாடுகளின் ஒன்றான வடகொரியா, ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நிகழ்த்தி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வெடிகுண்டு ஜப்பானைக் கடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிகுண்டு சோதனைக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், சீன பாதுகாப்புத் துறை அமைச்சரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, சீனாவில் கடந்த வாரம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், டோக்கா லாம் எல்லைப் பிரச்னையைக் கடந்து இந்திய-சீனா இடையே எல்லைப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு மோடியும், சீன பிரதமர் ஜீ ஜின்பிங்கும் முடிவு செய்தனர்.
இதனிடையே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முயன்று வரும் ஜப்பான், இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு நடவடிக்கையை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக, இந்தியா, ஜப்பான் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், ஏற்கெனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, ஜப்பானின் தொழில்நுட்ப நிறுவனமான 'ஏடிஎல்ஏ', ஜப்பான் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம், இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அதில், கண்காணிப்பு பணியில் ஆளில்லா வாகனங்களையும், ரோபோ இயந்திரங்களையும் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 
இந்தச் சூழலில், இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை ஆமதாபாத் நருக்கு வந்தார்.
அணிவகுப்பு மரியாதை...: முன்னதாக, ஆமதாபாத் விமான நிலையத்தை வந்தடைந்த ஷின்ஸோ அபேவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். ஷின்ஸோவுடன் அவரது மனைவி அகி அபேவும் வந்துள்ளார். விமான நிலையத்தில் அவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 
உற்சாக வரவேற்பு...: பின்னர், விமான நிலையத்தில் இருந்து ஷின்ஸோஅபே, அவரது மனைவி, பிரதமர் மோடி ஆகிய மூவரும் திறந்த வாகனத்தில் சபர்மதி ஆசிரமத்தை நோக்கி சென்றனர்.
வெளிநாட்டுத் தலைவர் ஒருவருடன் மோடி திறந்த வாகனத்தில் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகளுக்கு இடையேயான பந்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அந்த நிகழ்வு அமைந்துள்ளது.
திறந்த வாகனப் பேரணி தொடங்கியதும், அங்கு திரண்டிருந்த மக்கள், இரு நாட்டு தேசியக் கொடிகளை ஏந்தி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் எழுப்பினர். ஷின்ஸோஅபேவின் மனைவி அகி அபே, தங்களை வரவேற்ற மக்கள் கூட்டத்தினரை தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்தார்.
வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, மோடியும், ஷின்ஸோ அபேவும் கையசைத்தனர். அவர்களுக்கு முன்னால், பாரம்பரிய நடனமாடியபடி நடனக் கலைஞர்கள் சென்றனர்.
மேலும், பயண வழியில் இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்கும் விதமாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கலைக் குழுவினர், ஆங்காங்கே நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். இதுதவிர, ஜப்பானிய பாரம்பரிய குடையுடன் வந்த குழுவினர், விருந்தினர்களை வரவேற்றனர்.
ஆமதாபாத் விமான நிலையத்தில் தொடங்கிய அந்த வாகனத் பேரணி, 8 கி.மீ. தூரப் பயணத்துக்குப் பிறகு சபர்மதி ஆசிரமத்தில் நிறைவடைந்தது.
காந்திக்கு மரியாதை: சபர்மதி ஆசிரமத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு ஷின்ஸோஅபேவும், அவரது மனைவியும், பிரதமர் மோடியும் மரியாதை செலுத்தினர்.
அப்போது, ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக நடத்தப்பட்ட அகிம்சை வழிப் போராட்டத்தின்போது, இந்தியாவின் சுயசார்பை வெளிப்படுத்தும் குறியீடாக மாறிப்போன ராட்டையின் முக்கியத்துவம் குறித்து அபே தம்பதியிடம் மோடி விளக்கினார்.
பின்னர் அங்குள்ள வருகைப் பதிவேட்டில், 'அன்புடன் நன்றி' என்று ஜப்பானிய மொழியில் எழுதி ஷின்ஸோ அபே கையெழுத்திட்டார். உடன் அவருடைய மனைவியும் கையெழுத்திட்டார். சுமார் 3 மணி நேரம், அந்த ஆசிரமத்தில் இருந்த மோடியும், ஷின்ஸோ அபேவும் சபர்மதி ஆற்றங்கரையில் அமர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடினர்.
ஆசியப் பிராந்தியத்தில் அமைதி: முன்னதாக, ஷின்ஸோ அபே வெளியிட்ட அறிக்கையில், 'ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவுடன் ஜப்பான் இணைந்து செயல்படும்' என்று தெரிவித்தார்.
புல்லட் ரயில் திட்டம்


ஷின்ஸோ அபேவின் இந்தப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்ட அடிக்கல் நாட்டு விழாவாகும். ஆமாதாபாதில் மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடியும், ஷின்ஸோ அபேவும் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார்கள்.
பிரதமர் மோடியின் அந்த கனவுத் திட்டத்துக்கு ஜப்பான் கடனுதவி அளிக்கிறது. அந்த ரயில் திட்டம், வரும் 2022-ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆமதாபாத் நகரில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள மும்பை நகரை 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com