ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ என்னை விசாரிக்காமல் என் மகனை தொந்தரவு செய்வது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

2006-ஆம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ என்னிடம் விசாரிக்க வேண்டும், என் மகனை தொந்தரவு செய்யக்கூடாது என முன்னாள்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ என்னை விசாரிக்காமல் என் மகனை தொந்தரவு செய்வது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

புதுதில்லி: 2006-ஆம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ என்னிடம் விசாரிக்க வேண்டும், என் மகனை தொந்தரவு செய்யக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சிபிஐ முன் நேற்று வியாழக்கிழமை ஆஜராக மறுத்துவிட்டார்.

கடந்த 2006-ஆம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.5,129 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, வியாழக்கிழமை நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், அவர் தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகம் முன் நேரில் ஆஜராகவில்லை. இதுதொடர்பாக, அவரது வழக்குரைஞர் அருண் நடராஜன் கூறுகையில், ""சிபிஐக்கு தபால் மூலமாக கார்த்தி சிதம்பரம் பதிலளித்திருக்கிறார். அவரது கடிதம், சிபிஐக்கு காலை 10.30 மணிக்கு கிடைத்தது'' என்றார்.

அந்த பதிலில் கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது:
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வந்த தனி நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து விட்டது. வழக்கு விசாரணையையும் முடித்து வைத்து விட்டது.

நடந்து முடிந்த ஒரு வழக்குக்காக, நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அழைப்பாணை அனுப்ப முடியாது' என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5,129 கோடியை முதலீடு செய்வதற்கு அனுமதி கோரி, மேக்சிஸ் நிறுவனத்தின் மோரீஷஸ் கிளையான குளோபல் கம்யூனிகேஷன்ஸ் விண்ணப்பிருந்தது.

ரூ.600 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளுக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். ஆனால், அந்த முதலீட்டுக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ என்னிடம் விசாரிக்க வேண்டும், என் மகனை தொந்தரவு செய்யக்கூடாது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


    In Aircel-Maxis, FIPB recommended and I approved minutes. CBI should question me and not harass Karti Chidambaram.
    — P. Chidambaram (@PChidambaram_IN) September 15, 2017

    Sad CBI spreading misinformation. In Aircel-Maxis, FIPB officials have recorded statements before CBI that approval given was valid.
    — P. Chidambaram (@PChidambaram_IN) September 15, 2017


 “ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தவறான தகவல்களை பரப்புவது வருத்தமளிக்கிறது. வழக்கில் ஏற்கனவே, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் (எப்ஐபிபி) சிபிஐ முன் ஆஜராகி அறிக்கையை கொடுத்து உள்ளனர், ஒப்புதல் கொடுக்கப்பட்டது செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, திட்ட ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்தது நான்தான். அப்படி இருக்கையில் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் என்னை விசாரிக்காமல் என் மகன் கார்த்தி சிதம்பரத்தை விசாரிப்பது ஏன்? ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் சிபிஐ தவறான தகவல்களை பரப்புவது வருத்தம் அளிக்கிறது என சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com