குருகிராம் பள்ளி மாணவர் கொல்லப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஹரியாணா அரசு பரிந்துரை

ரயான் பள்ளி மாணவர் கொல்லப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க ஹரியாணா மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

ரயான் பள்ளி மாணவர் கொல்லப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க ஹரியாணா மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தினரை மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
குருகிராமில் உள்ள ரயான் பள்ளியில் பயின்ற பிரதுமன் தாக்குர் என்ற 7 வயது சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் மர்மமான வகையில் உயிரிழந்த இந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதுமனின் தந்தை உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர், உயிரிழந்த சிறுவன் பிரத்யுமானின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று அவரது பெற்றோரைசந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சிறுவன் பிரதுமன் தாக்குர் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமான சம்பவமாகும். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஹரியாணா மாநில காவல்துறை முறையாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அவரது பெற்றோரும், இதர சில தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, பிரதுமன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, இயன்ற வரையில் விரைவாக குற்றவாளிகளை கண்டறியுமாறு ஹரியாணா மாநில அரசு பரிந்துரைக்கிறது. இதனிடையே, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ரயான் பள்ளியை அடுத்த 3 மாதங்களுக்கு ஹரியாணா அரசு நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குருகிராம் துணை ஆணையர் கண்காணிப்பின் கீழ், அந்தப் பள்ளி வழக்கம்போல் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனோகர் லால் கட்டர் கூறினார்.
இதனிடையே, இதுபோன்ற விவகாரங்களில் பள்ளி நிர்வாகத்தினர் பொறுப்புக்குள்ளாகப்பட வேண்டும் என்று கூறிய பிரதுமனின் தந்தை வருண் தாக்குர், எதிர்காலத்தில் பள்ளி வளாகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com