தமிழகத்தில் நம்பிக்கையான நல்லாட்சி நடைபெறுகிறது: மு.தம்பிதுரை பேட்டி

"தமிழகத்தில் நம்பிக்கையுள்ள நல்லாட்சி நடைபெற்று வருகிறது' என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறினார்.
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அரக்கோணம் எம்.பி. கோ.ஹரி.
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அரக்கோணம் எம்.பி. கோ.ஹரி.

"தமிழகத்தில் நம்பிக்கையுள்ள நல்லாட்சி நடைபெற்று வருகிறது' என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறினார்.
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 109-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புது தில்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் (பழையது) அமைந்துள்ள அவரது அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கோ.ஹரி ஆகியோர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.தம்பிதுரை கூறியதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா, தமிழகத்தின் முன்னேற்றம், தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்ச் சமுதாயம் மேம்பாடு ஆகியவற்றுக்காக கனவு கண்டார். அவரது வழியில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
கட்சியில் (அதிமுக) பிளவு என்பது கிடையாது. நாங்கள் ஒன்றுமையுடன்தான் உள்ளோம். சில கருத்துவேறுபாடுகள் உள்ளன. இது ஜனநாயகத்தில் வழக்கமான ஒன்றுதான். இது காலப்போக்கில் சரியாகிவிடும். கருத்து வேறுபாடுகளை மட்டும் வைத்து கட்சியில் பிளவு என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறுதிப் பெரும்பான்மை பெற்றுத்தான் ஆட்சி அமைத்துள்ளார். ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆகவே, தமிழகத்தில் நம்பிக்கை உள்ள நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கட்சியின் பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் உரிமை சம்பந்தப்பட்டது. அதுபற்றி கருத்துச் சொல்ல முடியாது. மேலும், இது தொடர்பான வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
19 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்வாரா என்பது குறித்து கருத்துச் சொல்வதற்கில்லை. அது தொடர்புடைய விவகாரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றார் மு.தம்பிதுரை.
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கும் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, கோ.ஹரி எம்.பி. மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com