தில்லியில் செப். 25-இல் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

தில்லியில் வரும் 25-ஆம் தேதி பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது.

தில்லியில் வரும் 25-ஆம் தேதி பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில், நாடு முழுவதும் இருந்து பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்கவிருப்பதால், வழக்கத்துக்கு மாறாக பிரமாண்ட கூட்டமாக நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டங்களில், நிரந்தர உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 200 பேர் வரை பங்கேற்பதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த முறை செயற்குழு கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு கட்சி மேலிடம் முடிவு செய்
துள்ளது.
பாஜகவின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த தினமான செப்.25-ஆம் தேதி, தில்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, அக்கட்சியைச் சேர்ந்த 281 மக்களவை உறுப்பினர்கள், 56 மாநிலங்களவை உறுப்பினர்கள், சுமார் 1,400 எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தீனதயாள் உபாத்யாயாவின் நினைவாக, பாஜக சார்பில் நிகழாண்டில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உரையாற்றவுள்ளனர்.
காரணம் என்ன?: வழக்கத்துக்கு மாறாக இந்த முறை செயற்குழு கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்படுவது ஏன் என்பது குறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:
பல்வேறு விவகாரங்களில் பாஜகவின் நிலைப்பாடு, எதிர்காலத்துக்கான தொலைநோக்குத் திட்டம் ஆகியவை குறித்து கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாநில மூத்த தலைவர்களுடன் நேரடியாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கத்திலேயே செயற்குழு கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயற்குழு கூட்டத்துக்கு முதல் நாள் (செப்.24) கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. செயற்குழு கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவு தொடர்பாகவும், இதர விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com