மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம்: சுதாகர் ரெட்டி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு மாத காலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம்: சுதாகர் ரெட்டி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு மாத காலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
இது தொடர்பாக புது தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அஜய் பவனில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்று ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார வளர்ச்சியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சகிப்பின்மை போன்றவற்றால் சாமானிய மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பல்வேறு பாஜக தலைவர்கள் ஊழல்களில் தொடர்புடையவர்களாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இதுகுறித்து குரல் எழுப்புவோரின் குரலை ஒடுக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. பெட்ரோலியப் பொருள்கள், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதுபோன்ற பாஜக அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம், ஊர்வலம், பொதுக்கூட்டம் வாயிலாக ஒரு மாத கால பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது என்றார் சுதாகர் ரெட்டி.

"தமிழக ஆளுநரின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது'

தற்போதைய தமிழக அரசியல் சூழலில் ஆளுநரின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா கூறினார்.
தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜய் பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை, அரசியல் குழப்பமும், நெருக்கடி ஆகியவை நிலவுகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு தனது பெரும்பான்மையை இழந்து நிற்கும் சூழல் காணப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் செயல்பட்டிருந்தால், தமிழக முதல்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று உத்தரவிடாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இதனால்தான் ஆளுநரின் செயல்பாடு பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், ஆளுநர் நடந்துகொண்ட விதமும், அதற்கு யார் காரணம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆளுநரின் செயல்பாடுகளே தேசிய அளவில் விவாதம் நடத்தப்படும் அளவுக்கு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்றார் டி.ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com