சிந்து நதி நீர் பேச்சுவார்த்தை: இந்தியா - பாக். இடையே உடன்பாடு எட்டப்படவில்லை

சிந்து நதி நீர்ப் பகிர்வு விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
சிந்து நதி நீர் பேச்சுவார்த்தை: இந்தியா - பாக். இடையே உடன்பாடு எட்டப்படவில்லை

சிந்து நதி நீர்ப் பகிர்வு விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என்று உலக வங்கி உறுதியளித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே 6 நதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தமானது மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் அயூப் கான் ஆகியோர் முன்னிலையில் கடந்த 1960-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பஞ்சாபில் இருந்து உருவாகும் பியாஸ், ராவி, சட்லஜ் ஆகிய மூன்று நதிகள் இந்தியாவுக்கென்றும், ஜம்மு-காஷ்மீரில் உருவாகும் சிந்து, செனாப், ஜீலம் உள்ளிட்ட நதிகள் பாகிஸ்தானுக்கென்றும் பங்கிடப்பட்டன. அதேவேளையில், பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நதிகளில் பாயும் நீரில் இந்தியாவுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அவற்றை அதிக அளவில் இந்தியா பயன்படுத்தாமல் இருந்து வந்தது. ஜம்மு - காஷ்மீரில் 13.14 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு அந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அளவை இந்தியா முழுமையாகப் பயன்படுத்தாமல் 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே பாசனம் செய்துவந்தது. இதனால், அந்த மூன்று நதிகளின் பெருமளவு தண்ணீர் பாகிஸ்தானுக்கே சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே, இந்திய மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, சிந்து நதி நீர்ப் பகிர்வில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நடுவே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாயும் அந்த நதிகளின் ஊடே ராத்லே மற்றும் கிஷன்கங்கா பகுதிகளில் இருவேறு மின்திட்டங்களை அமைக்க மத்திய அரசு நடவடிக்கைள் எடுத்து வருகிறது. ஆனால், அதன் தொழில்நுட்ப அம்சங்களுக்கும், வடிவமைப்புக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய நீர்வளத் துறைச் செயலர் அமர்ஜித் சிங் தலைமையிலான குழு அதில் பங்கேற்றது. பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு நீர்வளத் துறைச் செயலர் ஆரிஃப் அகமது தலைமையிலான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளின் மத்தியஸ்த தரப்பாக செயல்பட்டு வரும் உலக வங்கி, இப்பேச்சுவார்த்தைக்கு முன்னிலை வகித்தது. இந்தச் சூழலில் பேச்சுவார்த்தை தொடர்பாக அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
பேச்சுவார்த்தையின்போது சிந்து நதி வழித்தடத்தில் இந்தியா அமைத்து வரும் புனல் மின் திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் முரண்பட்ட கருத்தைக் கொண்டுள்ளன. 
இப்பிரச்னையில் சுமுக உடன்பாடு எட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அந்த அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com