பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை பரிசீலிக்க வேண்டும்

பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசும் பரிசீலிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் வலியுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்.

பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசும் பரிசீலிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் வலியுறுத்தினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் "கொள்கை மற்றும் திட்டக் குழு' 2 நாள் பயணமாக சனிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றது.
ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது ஏற்பட்ட வன்முறையைக் கருத்தில்கொண்டு இந்தக் குழுவை காங்கிரஸ் கட்சி கடந்த ஏப்ரல் மாதம் அமைத்தது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இக்குழுவில், அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் குலாம் நபி ஆஸாத், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கட்சியின் பொதுச் செயலர் அம்பிகா சோனி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். ஸ்ரீநகருக்கு சனிக்கிழமை வந்த அவர்களை அந்த மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: இந்தக் குழு, அடுத்த 2 தினங்களில் எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஷியா அமைப்புகளைச் சேர்ந்த குழுவினர், மாநிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குங்குமப்பூ உற்பத்தியாளர்கள், படகு இல்ல சங்கத்தினர், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்பவர்கள், செய்தியாளர்கள் அடங்கியக் குழுவினர் ஆகியோரை சந்திக்கிறது.
இக்குழுவின் நிகழ்ச்சி நிரலில் பிரிவினைவாதிகளுடனான சந்திப்பு இடம்பெறவில்லை என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து குலாம் நபி ஆஸாத் கூறியதாவது: பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை ஜம்மு-காஷ்மீர் அரசும், மத்திய அரசும் பரிசீலிக்க வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட காலமாக நிலவிவரும் காஷ்மீர் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் சாதிப்பது ஏன்? காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதால் மட்டுமே பாஜகவால் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிகம் நடைபெறவில்லை. ஆனால், தற்போதைய ஆட்சியில் நமது ராணுவ வீரர்கள் அந்நாட்டு ராணுவத்தினரின் தாக்குதலுக்கு அதிக எண்ணிக்கையில் வீரமரணம் அடைந்து வருகின்றனர் என்றார் குலாம் நபி ஆஸாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com