குஜராத்தின் கேவாடியா பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி. நாள்: ஞாயிற்றுக்கிழமை.
குஜராத்தின் கேவாடியா பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி. நாள்: ஞாயிற்றுக்கிழமை.

சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

குஜராத் மாநிலத்தில் நர்மதை நதி மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது இந்தியாவின் மிகப் பெரிய அணை ஆகும்.

குஜராத் மாநிலத்தில் நர்மதை நதி மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது இந்தியாவின் மிகப் பெரிய அணை ஆகும். உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய அணை என்ற புகழையும் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி தனது 67-ஆவது பிறந்த தினத்தையொட்டி (செப்.17) குஜராத்தில் உள்ள தன் சகோதரர் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்துவரும் தாய் ஹீராபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆமதாபாத்துக்கு சனிக்கிழமை இரவு வந்தார். அவர் தன் தாயாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஆசி பெற்றார். அங்கிருந்து நர்மதை மாவட்டம், கேவாடியா பகுதிக்குச் சென்ற அவர், அங்கு நர்மதை நதி மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அங்கிருந்து வதோதரா மாவட்டம், தபோய் பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
"தடைகளைக் கடந்துவந்த அணைத் திட்டம்': உலகில் சர்தார் சரோவர் அணையைக் கட்டுவதற்கு எழுந்த தடைகளைப் போல வேறு எந்தவொரு திட்டத்துக்கும் இவ்வளவு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்காது. இந்தத் திட்டத்தை நிறைவேறவிடாமல் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. இத்திட்டத்தை எதிர்த்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட நான் விரும்பவில்லை.
அணை கட்டுவதற்கு உலக வங்கி நிதியுதவி அளிக்காமல் கைவிரித்துவிட்டது. எனினும், இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
அதன்படி தற்போது அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சர்தார் சரோவர் அணை பொறியியல் துறையின் அதிசயமாகும். பொறியியல் பயிலும் மாணவர்கள் இந்த அணை எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த அணை கட்டப்பட்டதன் மூலம் குஜராத் மட்டுமல்லாமல், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில மக்களும் பலனடைவார்கள்.
குஜராத் மாநிலத்தையொட்டி உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் குடிநீர் தேவையையும் இந்த அணையைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியும்.
சர்தார் சரோவர் அணை கட்டப்பட வேண்டும் என்று கனவு கண்ட இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேல்,
அரசியல் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோருக்கு இந்த அணையை சமர்ப்பிக்கிறோம்.
எனது பிறந்த தினத்தன்று இந்த அணையை நாட்டுக்கு அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மோடி பேசினார்.


56 ஆண்டுகளுக்கு முன் நேரு அடிக்கல் நாட்டினார்

நர்மதை ஆற்றின் மீது அணை கட்டும் திட்டத்துக்கு, கடந்த 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். அதையடுத்து தொடங்கிய அணை கட்டும் பணியில், நீதிமன்ற வழக்குகள் உள்பட பல்வேறு பிரச்னைகளினால் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன.
இதனால், அணையைக் கட்டி முடிப்பதற்கு 56 ஆண்டுகளானது. இந்த அணையின் உயரம், 138.68 மீட்டர் ஆகும்.
அணையைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. கடந்த 1996-ஆம் ஆண்டு அணைத் திட்டத்துக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், 2000-ஆவது ஆண்டில் அணை கட்டுவதற்கு அனுமதி அளித்தது.
இருப்பினும், அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்துவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதி அளிக்கவில்லை. பிரதமராக தாம் பதவியேற்ற 17 நாள்களில் 138 மீட்டர் (452 அடி) உயரத்தில் அணை கட்டுவதற்கு மோடி ஒப்புதல் அளித்தார்.
இந்த அணை கட்டும் பகுதியில் வசித்துவந்த பல்வேறு கிராமத்தினர் அணை கட்டுவதற்காக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிலருக்கு இன்னமும் உரிய இழப்பீடும், மறுவாழ்வும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக் கோரி நர்மதை அணை பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வருபவரும், சமூக நல ஆர்வலருமான மேதா பட்கர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர் கையிலெடுத்துவருகிறார்.
"குஜராத்தின் வாழ்வாதாரம்': சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டதால் குஜராத் மாநிலத்தில் உள்ள 9,633 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடையும் என்றும் 15 மாவட்டங்களில் உள்ள 18.54 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் அளிக்க முடியும் என்றும் பாஜக பிரமுகர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த அணை "குஜராத்தின் வாழ்வாதாரம்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com