பணம் கேட்டு மிரட்டல்: தாவூத் இப்ராஹிமின் சகோதரர் கைது

மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் கட்டுமான நிறுவன அதிபர்களை பணம் கேட்டு மிரட்டிய குற்றச்சாட்டின்கீழ், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸ்கரை

மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் கட்டுமான நிறுவன அதிபர்களை பணம் கேட்டு மிரட்டிய குற்றச்சாட்டின்கீழ், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸ்கரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.
மும்பை, தாணே ஆகிய பகுதிகளில் செயல்படும் கட்டுமான நிறுவனங்களின் அதிபர்களிடம், பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் தாவூத் இப்ராஹிம் பெயரைச் சொல்லி அவரது சகோதரர் காஸ்கர் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக காவல்துறைக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், காஸ்கருக்கு தொடர்பிருப்பது உறுதியானது. இதையடுத்து, அவரது தொலைபேசி உரையாடலை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது கட்டுமான நிறுவன அதிபர்களை மிரட்டி, காஸ்கர் ஏராளமாக பணம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள காஸ்கரின் வீட்டுக்குச் சென்று, அவரை தாணே போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். காஸ்கரை காவல்துறையினர் கைது செய்வது, இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு கடந்த 2015-ஆம் ஆண்டில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். எனினும், அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரரான காஸ்கருக்கு எதிராக கொலை வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. அரசு நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டது தொடர்பான சாரா சஹாரா வழக்கிலும் காஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் இருந்து அவரை நீதிமன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டில் விடுவித்து விட்டது.
தாணே நகர காவல்துறை ஏஇசி பிரிவு தலைவராக என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எனப்படும் பிரதீப் ஷர்மா அண்மையில் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான காவல்துறையினரே காஸ்கரை கைது செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com