ரோஹிங்கயா அகதிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம்

மியாமன்மரிலிருந்து வந்துள்ள ரோஹிங்கயா முஸ்லிம்கள் 'சட்டவிரோத' அகதிகள் எனவும், அவர்களால் தேசப் பாதுப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மியாமன்மரிலிருந்து வந்துள்ள ரோஹிங்கயா முஸ்லிம்கள் 'சட்டவிரோத' அகதிகள் எனவும், அவர்களால் தேசப் பாதுப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றப் பதிவகத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் குடியேறுவதற்கும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வசிப்பதற்கும் அரசியல் சாசனத்தின் 19-ஆவது பிரிவு அளித்துள்ள அடிப்படை உரிமை, இந்த நாட்டுக் குடிமக்களுக்கு மட்டுமே உரித்தானது.
இந்த உரிமையைக் கேட்டு நேரடியாகவோ, பிறரது மூலமாகவோ உச்ச நீதிமன்றத்திடம் முறையிட சட்டவிரோத அகதிகளுக்கு உரிமை கிடையாது.
இந்தியாவில் ரோஹிங்கயா முஸ்லிம்கள் குடியேறுவதும், இங்கு வசிப்பதும் சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமல்லாமல், அவர்கள் இங்கு தங்கியிருப்பதால் தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் விரும்பினால், ரோஹிங்கயா அகதிகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த விவரங்களை சீலிட்ட உறையில் சமர்ப்பிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
கடந்த 1951-ஆம் ஆண்டிலும், 1967-ஆம் ஆண்டிலும் மேற்கொள்ளப்பட்ட அகதிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. எனவே, அந்த ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள விதிகள் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மரில் பல தலைமுறைகளாக வசித்து வரும் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு, அந்த நாட்டில் குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், ரோஹிங்கயா பயங்கரவாத அமைப்பினர் அண்மையில் மேற்கொண்ட சில தாக்குதல்களைத் தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மியான்மர் ராணுவம் ரோஹிங்கயா முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்துவது, அவர்களது வீடுகளுக்குத் தீ வைப்பது போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், வன்முறையிலிருந்து தப்பி வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வரும் ரோஹிங்கயா முஸ்லிம்களில் பலர், அடைக்கலம் தேடி இந்தியாவுக்கும் வந்துள்ளனர்.
எனினும், ரோஹிங்கயா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களை அடுத்த மாதம் 3-ஆம் தேதி மீண்டும் மியான்மருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா.வால் சர்வதேச அகதிகளாக அங்கீகாரம் பெற்ற முகமது சலீமுல்லா, முகமது ஷாகீர் ஆகிய இரு ரோஹிங்கயா முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தாங்கள் இன வன்முறைத் தாக்குதல்களிலிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்திருப்பதால், சர்வதேச சட்டங்களின்படி தங்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த மனுவை நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாகவே, உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com