கர்நாடக இசை உலகின் ஒரு சகாப்தம் 'எம்.எஸ்.': வெங்கய்ய நாயுடு புகழாரம்

கர்நாடக இசை உலகின் ஒரு சகாப்தம் எம்.எஸ். சுப்புலட்சுமி என்று குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார்.
விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடும் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு
விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடும் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு

கர்நாடக இசை உலகின் ஒரு சகாப்தம் எம்.எஸ். சுப்புலட்சுமி என்று குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார்.
புது தில்லியில் மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான இந்திரா காந்தி தேசியக் கலைகளுக்கான மையம் (ஐஜிஎன்சிஏ) சார்பில், மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாட்ட நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, 'குறையொன்றும் இல்லை' எனும் தலைப்பில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை, இசைப் பயணம் குறித்த கண்காட்சி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். முன்னதாக, விழாவில் ரூ.100 மற்றும் ரூ.10 மதிப்பிலான நாணயங்களை வெளியிட்டு அவர் பேசியதாவது:
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி எனும் எம்.எஸ். சுப்புலட்சுமி தனது இனிமையான, தெய்வீகக் குரலால் மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட தேசத் தலைவர்களைக் கவர்ந்தவர். அவர் கர்நாடக இசை உலகின் ஒரு சகாப்தம். அவரது இசை சாகாவரம்பெற்றவை. தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ அன்னமாச்சாரியார்ஆகியோரின் கீர்த்தைனைகளையும், மீரா, துளசிதாசர் ஆகியோரின் பஜனைப் பாடல்களையும் எம்.எஸ். குரலில் கேட்கும் போது தெய்வீக நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். தனது மென்மையான குரலால் மகாத்மா காந்தி முதல் சாமானிய மனிதர்கள் வரை ஈர்த்தவர் அவர். பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக் கலைஞர்.
சரோஜினி நாயுடுவால் 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும், பாடகர் லதா மங்கேஸ்கரால் 'தபஸ்வினி' என்றும் அழைக்கப் பெற்றவர். அதேபோன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இசை நிகழ்ச்சியை நடத்திய முதல் இந்தியரும் அவர்தான். எம்.எஸ். சுப்புலட்சுமியின் 'வைஷ்ணவ ஜனதோ' எனும் பாடலை கேட்டு மகாத்மா காந்தி மெய்மறந்தார். எம்.எஸ். அம்மா குறித்து பண்டித ஜவாஹர்லால் நேரு கூறும் போது, 'இசை ராணியின் முன் நான் ஒரு சாதாரண பிரதமர்' என்றார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசையின் மகத்துவத்தை நேருவும், ராஜாஜியும் ஒருங்கிணைந்து பாராட்டினர்.
இசைக்கு எல்லை, தடை கிடையாது. அதை மெய்ப்பிக்கும் வகையில் எம்.எஸ். சுப்புலட்சுமியும் தனது இசையால் மொழி, இனம், மதங்களைக் கடந்து உலகம் முழுவதும் சென்றடைந்தார். அவரது பிறந்த தின நூற்றாண்டு விழாவை இந்திரா காந்தி தேசிய கலைகளுக்கான மையம் எடுத்து நடத்துவது பாராட்டுக்குரியது. இந்திய இசை குறித்த விவரங்கள் வேத இலக்கியமான சாம வேதத்தில் காணப்படுகின்றன. நமது மூதாதையர் நமக்கு விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்களான பழங்கால இசை முறையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா இசையுடன்கூடிய செறிந்த கலாசார பாரம்பரியத்தைக் கொண்டது. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
இந்நிகழ்ச்சியில் மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா பேசுகையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பணிகள் குறித்து பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதில், ஐஜிஎன்சிஏ திட்ட இயக்குநர் மங்களம் சுவாமிநாதன் பேசுகையில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தின நூற்றாண்டு விழா குறித்து எடுத்துரைத்தார்.
எம்.எஸ். சுப்புலட்சுமியன் பேரன் வி.ஸ்ரீநிவாசன், ஐஜிஎன்சிஏ அறங்காவலர்கள் சோனால் மான்சிங், பரத் குப்த், டி.பி. சின்ஹா, சண்முகானந்த சங்கீத சபா பொதுச் செயலர் எஸ்.கிருஷ்ணசாமி, கமிட்டி உறுப்பினர் கே.வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஷமினா தொகுத்து வழங்கினார். 
ஐஜிஎன்சிஏ உறுப்பினர்-செயலர் சச்சிதானந்த் ஜோஷி நன்றி கூறினார். முன்னதாக, இறை வணக்கம் பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப் பெயர்த்திகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் பாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com