தில்லியில் மேலும் 485 பேருக்கு டெங்கு பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 2,215-ஆக அதிகரிப்பு

தில்லியில் கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக மொத்தம் 485 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தில்லியில் மேலும் 485 பேருக்கு டெங்கு பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 2,215-ஆக அதிகரிப்பு

தில்லியில் கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக மொத்தம் 485 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதையும் சேர்த்து இதுவரை இந்நோயால் மொத்தம் 2,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, கடந்த வாரத்தில் புதிதாக மலேரியாவுக்கு 105 பேரும், சிக்குன்குனியாவுக்கு 40 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பருவத்தில் மட்டும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொத்தம் டெங்குவால் பாதிக்கப்பட்ட 2,215 பேர்களில் 1,177 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய நோயாளிகள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 348 பேர் இந்த மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தில்லியில் 518 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, செப்டம்பர் 16-ஆம் தேதி நிலவரப்படி இந்த ஆண்டில் மலேரியாவுக்கு 869 பேரும், சிக்குன்குனியாவுக்கு 472 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் ஜூலை மத்தியிலிருந்து நவம்பர் இறுதி வரையிலான காலத்தில் தாக்குகின்றன. ஆனால், இந்த ஆண்டு இந்தக் காலத்திற்கு முன்பே இந்த மூன்று நோய்களின் தாக்குதல் இருந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்னீரில்  உற்பத்தியாகும் "ஏடீஸ்' கொசுக்களால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவுகிறது. அதே போல, நன்னீர் மற்றும் சுகாதாரமற்ற நீரில் உற்பத்தியாகும் "அனோபெல்ஸ்' கொசுக்களால் மலேரியா நோய் பரவுகிறது.

தில்லியில் 1,57,552 வீடுகளில் கொசுப் பெருக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சி நிர்வாகங்களும், கொசுப் பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்வது, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே,  டெங்கு, சிக்குன்குனியாவுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கும் ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற மாத்திரைகளை தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த ஆண்டு எய்ம்ஸ் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு 21 பேர் உயிரிழந்ததாக  கூறப்பட்டது. ஆனால், மாநகராட்சி தரப்பில் டெங்குவால் பாதிக்கப்பட்டு 10 பேர் தான் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மலேரியாவால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்ததாக மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்நோயால் பாதிக்கப்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை என்று மாநகராட்சிகள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி வரை சிக்குன்குனியா நோய் பாதிப்பு காரணமாக மொத்தம் 12,221  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9,749 பேருக்கு சிக்குன்குனியா நோய் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com