மோடி - ஜேட்லி சந்திப்பு ஒத்திவைப்பு

பிரதமர் நரேந்திர மோடி - மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இடையே செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி - மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இடையே செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அபரிமிதமாக இருந்தது. குறிப்பாக, 2015-ஆம் ஆண்டில் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்தது. அந்த சமயத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருந்தது. 
ஒருகட்டத்தில், பொருளாதார வளர்ச்சியில் சீனாவையே இந்தியா பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டது.
ஆனால், இந்தப் பொருளாதார வளர்ச்சி நீண்டகாலத்துக்கு இருக்கவில்லை. 2016-ஆம் ஆண்டு தொடக்கத்தில், உலக அளவில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு இறுதியில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 7.1 சதவீதமாகக் குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகள் குறித்தும், அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிதித்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனை நடத்துவதாக இருந்தது. 
ஆனால், இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நிதியமைச்சகம் திடீரென அறிவித்தது. எனினும், இந்த ஆலோசனைக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com