அரசியல் முன்விரோதம்: ஒரே குடும்பத்தில் 5 பேர் படுகொலை

ஃப்ரீதாபாத் அருகே பால்வாலி கிராமத்தில் அரசியல் முன்விரோதம் காரணமாக நடந்த மோதலில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அரசியல் முன்விரோதம்: ஒரே குடும்பத்தில் 5 பேர் படுகொலை

ஃப்ரீதாபாத் அருகே பால்வாலி கிராமத்தில் அரசியல் முன்விரோதம் காரணமாக நடந்த மோதலில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஊராட்சித் தலைவர், அவரது கணவர் உள்பட  மொத்தம் 23 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது:  
பால்வாலி ஊராட்சித் தலைவராக இருப்பவர் தயாவதி. இவரது கணவர் பில்லு முன்னாள் ஊராட்சித் தலைவராவார். இந்நிலையில், இக்கிராமத்தில் ஊராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான முன்விரோதத்தில் ஞாயிற்றுக்கிழமை அக்கிராமத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 23 பேரை கைது செய்தனர்.   நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 18 பேரில் ஊராட்சித் தலைவர் தயாவதி மற்றும் அவரது மாமியார் ஓம்வதி ஆகிய இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 11 பேர் இரண்டு முதல் 4 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிறார் ஒருவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய எதிரியான தயாவதியின் கணவர் பில்லு மற்றும் நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரில், ஊராட்சித் தேர்தலில் தயாவதிக்கு ஆதரவு அளிக்காததால் இக்கொலை நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்வதற்காக ஹரியாணாவில் உள்ள பால்வாலி, குருகிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இக்கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மீண்டும் மோதல்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் அக்கிராமத்தில் போலீஸார்  அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com