சத்தீஸ்கரில் கிராமவாசிகள் 10 பேரை கடத்திய நக்ஸல்கள்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்பட 10 பேரை, நக்ஸல் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்பட 10 பேரை, நக்ஸல் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுக்மா மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர சுக்லா கூறியதாவது:
சிந்தகுபா கிராமத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆயுதங்களுடன் புகுந்த நக்ஸல் தீவிரவாதிகள், அந்த கிராமத்தின் பெண் தலைவர், துணைத் தலைவர் உள்பட சுமார் 10 பேரை கடத்திச் சென்றுவிட்டனர்.
அந்த பெண் தலைவரின் கணவரான போடியம் பாண்டு (எ) பாண்டா, முன்பு நக்ஸல் இயக்கத்தில் இருந்தவர். கடந்த மே மாதம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரிடம் (சிஆர்பிஎஃப்) அவர் சரணடைந்தார்.
சுக்மாவில் கடந்த ஏப்ரல் மாதம் சிஆர்பிஎஃப் படையினர் 25 பேர் உயிரிழக்க காரணமான தாக்குதலில் பாண்டுக்கு தொடர்பு உள்ளது. சரணடைந்த பின்னர், அந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்ற தீவிரவாதிகள் குறித்த முக்கிய விவரங்களை பாண்டு தெரிவித்தார். அத்துடன், சுக்மாவில் நக்ஸல் அச்சுறுத்தல் மிகுந்த கிராமங்களில், பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதற்கு, மாவட்ட நிர்வாகத்துக்கு பாண்டு உதவி வந்தார்.
இந்நிலையில், அவரது மனைவியையும், மகனையும் நக்ஸல்கள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அனைவரையும் மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம் என்றார் ஜிதேந்திர சுக்லா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com