சுனந்தா புஷ்கர் வழக்கு: புதிய விசாரணை உத்தியைக் கையாள நீதிமன்றம் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், மேலை

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் 'தடய உளவியல்' என்ற புதிய விசாரணை முறையைக் கையாள போலீஸாருக்கு தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தில்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய தில்லி போலீஸார், சசிதரூருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதலில் கருதினர்.
ஆனால், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சுனந்தா புஷ்கர் இறப்பு இயற்கையானது அல்ல என்றும், அவர் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பான விசாரணை தீவிரமடையத் தொடங்கியது. ஆனால், மூன்றாண்டுகள் நிறைவடைந்த போதிலும், இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, தில்லி உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, தில்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், சுனந்தா புஷ்கர் வழக்கில் மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் தடய உளவியல் என்ற விசாரணையை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் இந்த வழக்கு விசாரணை நடைபெறப் போகிறது? என்று கேள்வியெழுப்பினர். மேலும், ''இத்தனை ஆண்டுகளாக ஒரு வழக்கை இழுத்தடிக்க வேறு விசாரணை அமைப்புகளால் முடியாது'' என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அதற்குப் பதிலளித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் கூறியதாவது:
இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு சிறிய விஷயத்தைக் கூட நழுவவிட்டு விடக் கூடாது என்ற முனைப்பில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், வழக்கை முடித்து வைப்பதற்குள், கடைசியாக 'தடய உளவியல்' என்ற புதிய விசாரணை முறையைக் கையாள போலீஸார் விரும்புகின்றனர். இந்த விசாரணை முறை நிச்சயம் பலனளிக்கும் என அவர் வாதிட்டார்.
இதையடுத்து, இந்த விசாரணை முறையைக் கையாள போலீஸார் அனுமதி அளித்தனர். மேலும், இந்த வழக்கு எப்போது நிறைவடையும் என்பது தொடர்பான உத்தேச அறிக்கையை நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'தடய உளவியல் விசாரணை'....: அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜெர்மனி போன்ற மேலை நாடுகளில் இந்தத் தடய உளவியல் விசாரணை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு வழக்கில் தொடர்புடையவர்களிடமிருந்து உளவியல் ரீதியில் உண்மையைப் பெறுவதற்காக இந்த விசாரணை முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணையை அனுபவம் வாய்ந்த மனோதத்துவ நிபுணர்கள் மேற்கொள்வார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com