பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் முயற்சிகளை பிரிக்ஸ் அமைப்பு கண்டிக்க வேண்டும்

பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் முயற்சிகளை பிரிக்ஸ் அமைப்பு கண்டிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியிருப்பதாக
பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டத்துக்கு இடையே தென் ஆப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் மஷாபேனைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டத்துக்கு இடையே தென் ஆப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் மஷாபேனைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் முயற்சிகளை பிரிக்ஸ் அமைப்பு கண்டிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா ஸ்வராஜ் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அவர், பிரிக்ஸ், இப்சா, சார்க், இந்தியா-செலாக் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களுடன் பல தரப்பு சந்திப்புகளை நடத்தியுள்ளார். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ் ஆகும். இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இடம்பெற்றுள்ள கூட்டமைப்பு இப்சா எனப்படுகிறது. இந்தியா, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் கடல்பகுதி நாடுகள் ஆகியவை அடங்கிய கூட்டமைப்பு ஐசெலாக் ஆகும்.
'வெளியுறவு அமைச்சர் சுஷ்மா நடத்திய பல தரப்பு சந்திப்புகள் அனைத்திலும் பயங்கரவாதம் தொடர்பான அச்சுறுத்தல் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அந்தச் சந்திப்புகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகளில் இந்த அம்சம் முக்கியமாக இடம்பெற்றது. இது மிகவும் வலுவான வகையில் வெளிப்பட்டது' என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
மற்ற நாடுகளின் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து சுஷ்மா தனது பேச்சின்போது வலுவாக எடுத்துரைத்தார். இது பயங்கரவாதத்தை அரசுக் கொள்கையாக வைத்திருப்பதை நிறுத்துமாறும், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிப்பதை நிறுத்துமாறும் பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கையாகும்.
பயங்கரவாதக் கூட்டமைப்புகளுக்கும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவதற்கும் இடையூறை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுஷ்மா வலியுறுத்தினார். 
முத்தரப்பு சந்திப்புகளில் பங்கேற்றதோடு, கிர்கிஸ்தான், ஆர்ஜெண்டினா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், காமன்வெல்த் அமைப்பின் அமைச்சர்கள் நிலையிலான செயல்திட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் சுஷ்மா பங்கேற்றார்.
பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பின்போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளைக் கண்டிக்க வலியுறுத்தும் ஜியாமென் பிரகடனத்தையும், இந்த அமைப்பின் முந்தைய உச்சி மாநாடுகளில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளையும் முழுமையாக அமல்படுத்துவதற்கு தலைவர்கள் உறுதிபூண்டனர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் முயற்சிகளை பிரிக்ஸ் அமைப்பு கண்டிக்க வேண்டும் என்று சுஷ்மா வலியுறுத்தினார்.
பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் குறித்து வலியுறு த்தப்பட்டது. 
பாதுகாப்பு கவுன்சிலில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் அவசியம் மற்றும் அதில் வளரும் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதன் அவசியம் குறித்து தலைவர்களிடம் ஒருமித்த கருத்து நிலவியது என்று ரவீஷ்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com