மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு சிபிஐ(எம்), டிஆர்எஸ் கட்சிகள் ஆதரவு

நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐ(எம்)), தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சிகள் அறிவித்துள்ளன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு சிபிஐ(எம்), டிஆர்எஸ் கட்சிகள் ஆதரவு

நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐ(எம்)), தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சிகள் அறிவித்துள்ளன.
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு வரும் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஹைதராபாதில் சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது: மாநிலங்களவையில் இந்த மசோதா 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவையிலும் அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று எங்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அந்த மசோதாவை, மக்களவையில் கொண்டு வருவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டது. தற்போது, பாஜக அந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது என்றார் பிருந்தா காரத்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. ஜிதேந்தர் ரெட்டி கூறுகையில், 'மக்களவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அதற்கு எங்கள் கட்சி நிச்சயம் ஆதரவளிக்கும்' என்றார். முன்னதாக, மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு தங்களது கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து, பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இதுதொடர்பாக இன்னமும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com