சவூதியில் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த இந்தியப் பெண் மீட்பு

நல்ல இடத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு சவூதி அரேபியாவில் 14 மாதங்கள் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த இந்தியப் பெண், உடுப்பி மனித உரிமை அமைப்பினரால் மீட்கப்பட்டுள்ளார்.

நல்ல இடத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு சவூதி அரேபியாவில் 14 மாதங்கள் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த இந்தியப் பெண், உடுப்பி மனித உரிமை அமைப்பினரால் மீட்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜசிந்தா மெண்டோன்கா (42) என்ற பெண் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடி மும்பையிலுள்ள ஒரு முகமை நிறுவனத்தை சில மாதங்களுக்கு முன்பு அணுகியுள்ளார்.
அவருக்கு கத்தார் நாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய அந்த நிறுவனம், அவரை துபைக்கு அனுப்பி வைத்தது. அங்கிருந்து, ஜசிந்தாவுக்குத் தெரியாமலே விமானம் மூலம் அவர் சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அரபி ஒருவருக்கு ஜசிந்தாவை ரூ.5 லட்சத்துக்கு மும்பை நிறுவனம் விற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த அரபியின் வீடுகளில் ஜசிந்தா கொத்தடிமையாக்கப்பட்டு, இரவு பகலாக வேலை வாங்கப்பட்டார்.
அங்கிருந்து தப்ப ஜசிந்தா மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த நிலையில், அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, உடுப்பியைச் சேர்ந்த மனித உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு 14 மாதங்களாக கொடுமைகளை அனுபவித்து வந்த ஜசிந்தாவை மீட்டது. அதையடுத்து, அவர் உடுப்பி நகருக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டார்.
இதுகுறித்து உடுப்பியிலுள்ள மருத்துவமனையொன்றில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
சவூதி அரேபியாவின் யான்பு நகரில் நான் நரகத்தை அனுபவித்து வந்தேன். என்னை பணிக்கு அமர்த்திய அரபியின் வீடு, அவரது அம்மா, மூன்று மனைவிகள், பிள்ளைகள் ஆகியோரது வீடுகள் என பல வீடுகளில் மாறி மாறி வேலை செய்ய வைத்தார்கள்.
அந்த வீடுகளிலுள்ள பிள்ளைகள் என்னை "அடிமை' என்று அழைத்தார்கள். அவர்களது துன்புறுத்தல்களைப் பொறுக்க முடியாமல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த வீட்டிலிருந்து தப்பி வெளியேறினேன். எனினும், போலீஸார் என்னைப் பிடித்து மீண்டும் அந்த அரபியிடமே கொண்டு விட்டனர்.
அதற்குப் பிறகு அவர்கள் என்னை மோசமாக அடித்து உதைத்தனர். தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர். இப்போது நான் மீட்கப்பட்டாலும், என்னை ஏமாற்றி சவூதி அரேபியாவுக்கு அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜசிந்தா.
இதுகுறித்து உடுப்பி மனித உரிமைகள் அறக்கட்டளை அமைப்பின் ரவீந்திர ஷான்பா கூறுகையில், தொடர்ந்து மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்குப் பிறகே ஜசிந்தாவை விடுவிக்க முடிந்ததாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com