ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி சொத்துகள் முடக்கம்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் தொடர்புடையதாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி சொத்துகள் முடக்கம்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் தொடர்புடையதாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
ஏர்செல் நிறுவனத்துக்கும், மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ முதலில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனமாக சந்தேகிக்கப்படும் அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கும் அறிவிப்பை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வங்கியில் கார்த்தி சிதம்பரத்தின் சேமிப்புக் கணக்கில் இருந்த தொகை, நிரந்தர வைப்புத் தொகை (பிக்ஸ்ட் டெபாசிட்) ஆகியவற்றை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் முடக்கியுள்ளோம். அதன் மொத்த மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும்.
இதேபோல், கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் நிறுவனத்தின் சார்பில், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.26 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையையும் முடக்கியுள்ளோம். இந்த நிறுவனத்தை இன்னொரு நபர் மூலம், கார்த்தி சிதம்பரம் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தார் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கும் வகையில், குருகிராமில் இருந்த தனக்குச் சொந்தமான சொத்தை கார்த்தி சிதம்பரம் கைமாற்றி விட்டதாகவும், குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளை மூடி விட்டதாகவும், மேலும் சில வங்கிக் கணக்குகளை முடித்துக் கொள்ளும் செயலில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டு வந்ததாகவும் அமலாக்கத் துறை அறிவிப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு: இதனிடையே, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ப.சிதம்பரம், பொய்கள், அனுமானம் ஆகியவை கலந்த கலவைகள் அடிப்படையில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமலாக்கத் துறையின் அறிவிப்பானது, என்னை அச்சப்படுத்த வேண்டும், எனது குரலை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். அமலாக்கத் துறை அறிவிப்பில் இருப்பவை அனைத்தும், பொய்கள் மற்றும் அனுமானங்களின் கலவையாகும். அமலாக்கத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதை, அதில் அமலாக்கத் துறை புத்திசாலித்தனமாக மூடி மறைத்துள்ளது.
அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய அதிகாரிகளிடம், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், உரிய முறையில் முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்தும், பிறகு அதை நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது குறித்தும் தெரிவித்துள்ளனர். அந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில் சிறப்பு கவனம் எதுவும் செலுத்தப்படவில்லை. சாதாரண வழக்கத்தின் அடிப்படையிலேயே, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com