நில ஆக்கிரமிப்பு: கேரள அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு குறித்து கேரள மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தாமஸ் சாண்டிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி

நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு குறித்து கேரள மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தாமஸ் சாண்டிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி திங்கள்கிழமை வலியுறுத்தியது.
இதுகுறித்து மாநில வருவாய்த் துறை அமைச்சர் இ. சந்திரசேகரனுக்கு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான ரமேஷ் சென்னிதாலா அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அமைச்சர் தாமஸ் சாண்டியின் நில ஆக்கிரமிப்பு குறித்து ஆலப்புழை ஆட்சியர் டி.வி. அனுபமா தங்களிடம் (மாநில வருவாய்த் துறை அமைச்சர்) அறிக்கை சமர்ப்பித்துள்ளதை அறிந்தோம்.
அந்த அறிக்கையில், 2008-ஆம் ஆண்டின் விளைச்சல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்புச் சட்டத்துக்கு விரோதமாக, தாமஸ் சாண்டி நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், தாமஸ் சாண்டிக்கு எதிராக ஆலப்புழை தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை இழுத்தடித்தால் அது நீதிக்கு சவால் விடுப்பதைப் போன்றதாகும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த குட்டநாடு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ தாமஸ் சாண்டி, அந்த மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராக உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், தனது தொகுதியிலுள்ள நீர்ப்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு மண் கொட்டி நிரப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தாமஸ் சாண்டி, 'நீர்ப்பரப்பில் நான் ஆக்கிமிப்பு செய்யவில்லை. எனக்குச் சொந்தமான பகுதிக்குச் செல்வதற்காக நீர்ப்பரப்பின் மீது 110 மீட்டர் தூரத்துக்கு குறுகலான மண்பாதை மட்டும் அமைத்தேன்' என்று தெரிவித்தார்.
எனினும், அவருக்குச் சொந்தமான சொகுசு விடுதிக்கு அருகே, கார் நிறுத்தம் ஏற்படுத்துவதற்காக அவர் நீர்ப் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஆலப்புழை ஆட்சியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு காரணமாக, அமைச்சர் பதவியிலிருந்து தாமஸ் சாண்டி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com