ரூ.16,320 கோடியில் அனைவருக்கும் மின் வசதி அளிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சார வசதி கிடைக்க வழி செய்யும் ரூ.16,320 கோடி மதிப்பிலான 'செளபாக்யா' திட்டத்தை பிரதமர் மோடி தில்லியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
ரூ.16,320 கோடியில் அனைவருக்கும் மின் வசதி அளிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சார வசதி கிடைக்க வழி செய்யும் ரூ.16,320 கோடி மதிப்பிலான 'செளபாக்யா' திட்டத்தை பிரதமர் மோடி தில்லியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களைச் சேர்ந்த 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு 2018-ஆம் ஆண்டுக்குள் மின்சார வசதி ஏற்படுத்தித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதாரக் கணக்கெடுப்பு மூலம் இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
செளபாக்யா திட்டத்தைத் தொடங்கிவைத்து மோடி பேசியதாவது: நமது நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகிவிட்டன. எனினும் நாட்டில் உள்ள 25 கோடி குடும்பங்களில் 4 கோடி குடும்பங்களுக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை. இவர்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்சார வசதியை ஏற்படுத்தித் தர உறுதிபூண்டு இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். முன்னதாக இத்திட்டத்துக்கான காலக்கெடு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நிர்ணயிக்கப்படிருந்தது. இப்போது பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும் நோக்கில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.
வரும் மே 1-ஆம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்துவிடும். இத்திட்டத்தின்கீழ் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மின்சார வசதி செய்து தரப்படும். இதற்கு முன்பு மின்தடை, மின்சாரப் பற்றாக்குறை போன்றவை மிகப்பெரிய பிரச்னையாக இருந்துள்ளது. ஆனால், இப்போது நிலைமாறி விட்டது. மின்பற்றாக்குறையில் இருந்து மின்மிகை நாடாக இந்தியா மாறி வருகிறது.
ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.100 கோடி முதலீட்டில் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதான மின்சார சமையல் சாதனங்களை தயாரிக்க அழைப்பு விடுத்துள்ளேன். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும் என்றார் மோடி.
இத்திட்டத்தில் பெரும் பகுதி நிதியை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசே வழங்குகிறது. தொலைத் தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கான பேட்டரி, 5 எல்இடி விளக்குகள், மின் விசிறி உள்ளிட்டவையும் வழங்கப்பட இருக்கின்றன.
முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு சுந்திர தின உரையின்போது நமது நாட்டில் 18,452 கிராமங்களில் மின்சார வசதி இல்லை. 1000 நாள்களில் அவர்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதில் இதுவரை 14,483 கிராமங்களில் இப்போது வரை மின்சார வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. 2981 கிராமங்களில் மின் இணைப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நமது நாட்டில் கிராமப் பகுதிகளில் உள்ள 17.92 கோடி வீடுகளில், 13.87 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 4 கோடி வீடுகளில் மின் இணைப்பு இல்லை.
மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் பரிசீலிக்கப்படும். கிராமப்புற மின் வசதி நிறுவனம் இத்திட்டத்தை கண்காணித்து செயல்படும். அடுத்த கட்டமாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com