ஆப்கானிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

'ஆப்கானிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை; அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து தனது பங்களிப்பை அளிக்கும்'
தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸை வரவேற்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸை வரவேற்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

'ஆப்கானிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை; அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து தனது பங்களிப்பை அளிக்கும்' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், ஆப்கானிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். தில்லியில் அவர், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் இருவரும், இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் தூண்டி விடப்படுவது உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள், சீனாவின் படைபல பெருக்கத்தால் தென்சீனக் கடலில் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்ற சூழ்நிலைகளுக்கு இடையே, அமெரிக்கா-இந்தியா இடையே கடலோரப் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நிர்மலா சீதாராமனும், மேட்டிஸும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்டை நாட்டு நிலவரம் (பாகிஸ்தான்), எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் ஆகியவை குறித்து இருவரும் பேசினோம். அப்போது பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்போர் மீது சகிப்புத் தன்மை காட்டக் கூடாது என்பதை இருவரும் ஒப்புக் கொண்டோம்.
பாகிஸ்தானுக்கு செல்லும்போது பயங்கரவாத விவகாரம் குறித்து அந்நாட்டு அரசிடம் எடுத்துரைக்கும்படி மேட்டிஸிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு பாகிஸ்தான் செல்லும்போது, பயங்கரவாதம் தூண்டிவிடப்படும் விவகாரத்தை, அந்நாட்டு அரசிடம் நிச்சயம் எழுப்புவேன் என்று மேட்டிஸ் வாக்குறுதி அளித்துள்ளார் என்றார் நிர்மலா சீதாராமன்.
ஆப்கானிஸ்தானில் இந்தியா சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இந்தியா ராணுவ ரீதியில் முக்கியப் பங்களிப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். 
ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ ரீதியில் இந்தியா எந்த பங்களிப்பும் அளிக்காது என்று தெளிவாக தெரிவித்து விட்டோம்; அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் அணைகள், மருத்துவமனைகள் கட்டுதல் போன்ற பணிகளில் தொடர்ந்து இந்தியா ஈடுபடும். போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து பங்களிப்பு அளிக்கும் என்று கூறியுள்ளோம்' என்றார்.
இதையடுத்து, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மேட்டிஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆப்கானிஸ்தானில் இந்தியா அளித்து வரும் விலைமதிப்பில்லா பங்களிப்பை அமெரிக்கா பாராட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு விரிவான நடவடிக்கைகளை இந்தியா எடுப்பதையும் அமெரிக்கா வரவேற்கிறது.
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கப்படுவது சகித்துக் கொள்ளப்பட மாட்டாது. சர்வதேச பயங்கரவாதத்தால், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை இருநாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. உலகத் தலைவர்கள் என்ற முறையில், பயங்கரவாத அச்சுறுத்தலை முழுவதும் ஒழிப்பதற்கு, இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்றார் மேட்டிஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com