மும்பை கூட்ட நெரிசல் எத்தனை ஆசைக் கனவுகளை நசுக்கியது? ஒரு சோகப் பட்டியல்!

மும்பையின் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது வெறும் 22 உயிர்கள் மட்டுமல்ல; அவர்களது ஆசைக் கனவுகளும், அவர்களது குடும்பத்தாரின் வாழ்வும்தான்.
மும்பை கூட்ட நெரிசல் எத்தனை ஆசைக் கனவுகளை நசுக்கியது? ஒரு சோகப் பட்டியல்!


மும்பை: மும்பையின் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது வெறும் 22 உயிர்கள் மட்டுமல்ல; அவர்களது ஆசைக் கனவுகளும், அவர்களது குடும்பத்தாரின் வாழ்வும்தான்.

நவராத்திரி பண்டிகைக் கொண்டாட்டத்துக்காக உற்சாகத்தோடு அலுவலகம் சென்றவர்களும், பண்டிகைக் காலங்கள் நெருங்குவதால் துணிமணிகள் வாங்க கடைகளுக்குச் சென்ற அப்பாவிகளும்தான் இந்த நெரிசலில் பலியாகியுள்ளனர்.

பலியானவர்களைப் பற்றிய நெஞ்சை உருக்கும் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. 

ஹிலோனி தேதியா (22)வின் இளம்சிவப்பு நிற பர்ஸை மருத்துவமனையில் இருந்த உதவி மையத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட பார்தி ஆல்யா, தேதியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் மருத்துவமனை முழுவதும் தேடுகிறார்.

காட்கோபாரில் இருந்து பரேலில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு, இன்று நவராத்திரி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பர்ப்பில் நிற ஆடையை அணிந்து கொண்டு வந்த தேதியா, காயமடைந்து கேஇஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து ஓடி வந்த அவரது உறவினர்கள், 2 மணி நேரத்துக்கும் மேலாக காயமடைந்தவர்களுக்கான பகுதியில் தேடியும் பலனில்லை. இறுதியாக சவக்கிடங்கில் தேட, அங்கு இருந்தது தேதியாவின் உடல்.

கடந்த ஆண்டுதான் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ஸி படித்துவிட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார் தேதியா. திருமணத்துக்காக மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், ஒரு சாதாரண நாள் இப்படி மாறிப்போனதே என்று அழுகிறார் உறவினர் பாரதி.

பழ வியாபாரியான சுரேஷ் ஜெய்ஸ்வால் (45), நவராத்திரியை முன்னிட்டு பூ வாங்க சென்ற சுமலதா ஷெட்டி, சுஜாதா ஆல்வா ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா தொழிலாளர் நல வாரிய ஊழியர்களான ஷ்ரத்தா கிஷோர் வார்பே (24), மீனா வால்ஹேகர் (34) ஆகியோர் அலுவலகம் செல்லும் போது பலியானார்கள். இவர்களது உடல்கள், நெரிசலில் சிக்கியவர்கள் அனைவரையும் மீட்ட பிறகே கண்டெடுக்கப்பட்டது. 

மீனாவின் உடலை அடையாளம் கண்ட அவரது குடும்ப நண்பர் நரேஷ் சொனாரியா கூறுகையில், இந்த செய்தியை பார்த்ததும், மீனாவின் சகோதரர் என்னைத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்குமாறு கூறினார். நான் மீனாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, ஒரு காவலர் எடுத்து, கேஇஎம் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினார் என்றார்.

அங்குஷ் ஜெய்ஸ்வால் (34) என்ற மென்பொருள் பொறியாளர், கடந்த மாதம் தான் ஒரு நிரந்தர பணியில் சேர்ந்துள்ளார். 65 வயது தாய், மனைவி மற்றும் 10 வயது மகனோடு வசித்து வந்த ஜெய்ஸ்வாலின் இழப்பால் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள் குடும்பத்தினர். தெருத் தெருவாக காய்கறி விற்று இவரை படிக்க வைத்த இவரது குடும்பத்தினரின் கனவு இன்று இந்த நெரிசலில் சிக்கி நசுங்கிப்போனது என்கிறார்கள் உறவினர்கள்.

இந்த விபத்தில் இறந்த மக்சூத் ஆலமுக்கு (40) 4 குழந்தைகள், முதல் குழந்தைக்கு தற்போது 8 வயதாகிறது. இவரது மரணத்தால் அவரது குடும்பமே நிற்கதியாகிப் போயுள்ளது.

உயிரிழந்தவர்களில் மிகவும் வேதனையைத் தருவதாக இருப்பது 38 வயதாகும் தெரசா ஃபெர்னான்டஸைப் பற்றி தகவல்தான். எல்பின்ஸ்டோனில் உள்ள விளம்பர நிறுவனத்தில் பணியாற்றும் தெரசா, அந்தேரியில் உள்ள நிறுவனத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தனது கடைசி பணிநாளான நேற்று, அலுவலகம் வரும் போதுதான் இந்த துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு சிறப்பான பிரிவுபச்சார விழா அளிக்க அலுவலக நண்பர்கள் திட்டமிட்டிருந்தனர். இறுதியில் (?)

எப்போதும் அலுவலகத்துக்கு நடந்தே செல்லும் தெரசா, அன்று சேலை கட்டியிருந்ததால் ரயிலில் செல்ல முடிவு செய்து ரயில் நிலையத்துக்கு வந்த போது, நெரிசலில் சிக்கியுள்ளார். இவருக்கு 9 மாதக் குழந்தையும், 7 வயதில் ஒரு குழந்தைகயும் உள்ளனர். பிரசவகால விடுப்பு முடிந்து கடந்த வாரம்தான் இவர் பணிக்குத் திரும்பினார் என்பது மேலும் வேதனையை அதிகரிக்கிறது.

இதுபோன்று ஏராளமான கனவுகளுடனும் ஆசைகளுடனும் ரயில் நிலையத்துக்கு வந்தவர்கள் இறந்த உடல்களாக அடையாளம் காணப்படும் நிலைமைக்குக் காரணம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

கூட்ட நெரிசலும், உயிரிழப்புகளும் இந்தியாவுக்கு புதிதில்லை என்று விட்டுவிடாமல், இதுபோன்ற ரயில் நிலையங்களை கண்டறிந்து உடனடியாக மேம்படுத்த வேண்டியது  ரயில்வே அமைச்சகத்தின் மிக முக்கியக் கடமை என்பதை உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com