எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம் தொடர்பாக 'பாரத் பந்த்': ம.பியில் நால்வர் பலி; 19 பேர் படுகாயம்! 

எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்களன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.
எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம் தொடர்பாக 'பாரத் பந்த்': ம.பியில் நால்வர் பலி; 19 பேர் படுகாயம்! 

புதுதில்லி: எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்களன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே  இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் திங்களன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்களன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித் அமைப்புகள் நாடு தழுவிய 'பாரத் பந்த்துக்கு' அழைப்பு விடுத்திருந்தன.

இந்த போராட்டத்தில் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தி அவர்கள் கலைக்கப்பட்டனர்.

இதில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் மொரேனாவில் நான்கு பேர் மரணமடைந்துள்ளார்கள். மேலும் 19 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.  

மேலும் பல இடங்களில் ரயில் மற்றும் பேருந்து மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவினை அவசர வழக்காக கருதி விசாரிக்க இயலாதென உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com