உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு: பாஜக எம்.எல்.ஏவை கைது செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு! 

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பாஜக எம்.எல். ஏ குல்தீப் சிங்கை கைது செய்ய சிபிஐக்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு: பாஜக எம்.எல்.ஏவை கைது செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு! 

லக்னெள: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை கைது செய்ய சிபிஐக்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவ் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரும், அவரது உதவியாளர்களும் கடந்த ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, 18 வயது இளம்பெண் ஒருவர் லக்னௌவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லம் முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளிக்க முயன்றார். அந்த முயற்சியை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, 'பாஜக எம்எல்ஏ குல்தீப், அவரது உதவியாளர்களுக்கு எதிராக உன்னாவ் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் தனது குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும்' அவர் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, அந்த எம்எல்ஏவின் சகோதரரை தாக்கியதாக கூறி, இளம்பெண்ணின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் 6 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இளம்பெண்ணின் புகார் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, தனது அறிக்கையை மாநில அரசிடம் புதன்கிழமை சமர்ப்பித்தது. அதனடிப்படையில் குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும்படி, காவல்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அத்துடன் அலஹாபாத் உயர் நீதிமன்றம் குல்தீப் சிங் செங்கர் மீது தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.   

அதன்பேரில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப் (போஸ்கோ) பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வியாழக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த வழக்கு சிபிஐ வசம் வியாழன் அன்று ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குல்தீப் சிங் செங்கர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் 363 (ஆள் கடத்தல்), 366 (பெண் கடத்தல்), 376 (கற்பழிப்பு), 506 (குற்றவியல் அச்சுறுத்தல்), மூன்று வழக்குகளை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், வெள்ளியன்று  காலை அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். அத்துடன் உன்னாவ் நகரத்தில் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அந்த இளம்பெண்ணிடமும் அதிகாரிகள் விசாரனை நடத்தினர்.

இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை கைது செய்யுமாறு சிபிஐக்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி போஸ்லே மற்றும் நீதிபதி அனித் குமார் அடங்கிய அமர்வானது பிறப்பித்த உத்தரவில், சம்பந்தப்பட்ட சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாஜக எம்.எல்.வை குல்தீப் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும்,  வரும் மே  2-ஆம் தேதி விரிவான விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதேபோல இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்யவும் சிபிஐக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com