குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் காங்கிரஸ்: கர்நாடக முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

குடும்ப அரசியலை காங்கிரஸ் கட்சி ஊக்குவிப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடா திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் காங்கிரஸ்: கர்நாடக முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலத்தின் 225 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு போட்டியடும் 218 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார். அவரது மகன் மருத்துவர்.யாதேந்திரா வாருணா தொகுதியில் போட்டியிடுகிறார். அதுபோல கர்நாடக உள்துறை அமைச்சர் ஆர்.ராமலிங்க ரெட்டி பெங்களூருவில் உள்ள பிடிஎம் லேஅவுட் தொகுதியிலும், அவரது மகள் சௌம்யா ரெட்டி ஜெயாநகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் ப்ரியங்க் கார்கே சிட்டாபூர் தொகுதியில் களமிறங்குகிறார். 

இதன்காரணமாக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அன்ஜனா மூர்த்திக்கு நீலமங்கலா தொகுதியில் போட்டியட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து, பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான டி.வி.சதானந்த கௌடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடும்ப அரசியலை ஊக்குவிப்பது தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம். எனவே தான் தொடர்ச்சியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி வருகிறது. புதியவர்களுக்கான வாய்ப்புகள் அக்கட்சியில் மறுக்கப்பட்டு வருகிறது. இது கர்நாடக காங்கிரஸ் கட்சியில் தொடர்கதையாகி வருகிறது. எனவே இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். அவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்படும்.

அதற்காக பாஜக-வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு வழங்குவதில்லை என்று கூறமாட்டேன். மாறாக ஒருவரின் தனிப்பட்ட தகுதியின் அடிப்படையிலேயே அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தகுதியில் தேர்தலில் போட்டியிடுவது பாஜக-வில் விதிவிலக்காக அமைவது உண்டு என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com