ஆந்திரத்தில் அமைதியாக முடிந்தது முழு அடைப்பு

ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி திங்கள்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்பு, அசம்பாவிதங்கள் இன்றி நிறைவடைந்தது.

ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி திங்கள்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்பு, அசம்பாவிதங்கள் இன்றி நிறைவடைந்தது.
'ஆந்திரப் பிரதேச பிரத்யேக ஹோடா சாதனா சமிதி' அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த முழு அடைப்பில், ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் பங்கேற்கவில்லை. எனினும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
முழு அடைப்பின்போது மாநிலத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை எனவும், திருப்பதியில் மட்டும் நகரபேருந்து நிலையத்துக்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததாகவும் போலீஸார் கூறினர்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி சூழ்நிலையை ஆய்வு செய்தார். 
அப்போது, மாநிலத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார். பள்ளி, கல்லூரிகள் மூடியிருந்த நிலையில், திங்கள்கிழமைக்கு அட்டவணையிடப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
சாலைகளில் பெரும்பாலான இடங்களில் தர்னா நடைபெற்ற நிலையில், மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விஜயவாடா பகுதியில் ஆந்திரப் பிரதேச பிரத்யேக ஹோடா சாதனா சமிதி அமைப்பின் தலைவர் சலாசனி ஸ்ரீனிவாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் மாது ஆகியோர் பிஎன் பேருந்து நிலையம் அருகே தர்னாவில் ஈடுபட்டனர்.
விசாகப்பட்டினத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2019 சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பாதயாத்திரையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, திங்கள்கிழமை ஒருநாள் தனது யாத்திரையை ஒத்தி வைத்தார். கிருஷ்ணா மாவட்டத்தில் முகாமிட்டிருந்தபடியே முழு அடைப்பை அவர் கண்காணித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com