கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: பாஜகவின் 2-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலில் ஜனார்த்தன் ரெட்டி சகோதரர், பங்காரப்பா மகன் பெயர்

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 2ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 2ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சுரங்க முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட ஜனார்த்தன் ரெட்டியின் மூத்த சகோதரர், மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு வரும் மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 72 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக கடந்த 8ஆம் தேதி முதல்கட்டமாக வெளியிட்டது. அதில் பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் எடியூரப்பா, மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், 82 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக 2ஆவது கட்டமாக திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், சர்ச்சைக்குரிய சுரங்க தொழில் அதிபரான ஜனார்த்தன ரெட்டியின் மூத்த சகோதரர் சோமசேகர் ரெட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சோமசேகர் ரெட்டி பெல்லாரி தொகுதியிலும், குமார் பங்காரப்பா சோரப் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
எடியூரப்பாவின் நண்பரான கிருஷ்ணய்யா ஷெட்டி, மலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் சேர்த்து, இதுவரை 154 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. எஞ்சிய தொகுதிகளுக்கும் அக்கட்சி விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் எனத் தெரிகிறது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி தரப்பில் முதல்கட்டமாக 218 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் முதல்வர் பதவி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தராமையா தற்போது எம்எல்ஏவாக இருக்கும் வருணா தொகுதியில், சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com