நீட்: கடந்த ஆண்டைப் போல கிழிக்க, அறுக்க, மாற்ற வேண்டாம் என்றால் இதைப் படியுங்கள்

2018-2019-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 6-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. 
நீட்: கடந்த ஆண்டைப் போல கிழிக்க, அறுக்க, மாற்ற வேண்டாம் என்றால் இதைப் படியுங்கள்


புது தில்லி: 2018-2019-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 6-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. 

கடந்த ஆண்டு 11 லட்சம் பேர் நாடு முழுவதும் இந்தத் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர்.

இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) நீட் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட இணைப்பில் சென்று, தங்களுடைய நீட் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டு மிக மோசமான சர்ச்சையை கிளப்பிய ஆடைக் கட்டுப்பாடு குறித்து இந்த முறை சிபிஎஸ்இ தெளிவான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 
வெளிர் நிறத்தில், அரைக் கை கொண்ட ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். முழுக்கை ஆடை அணியக் கூடாது.

ஆடைகளில், பெரிய பட்டன்கள், பேட்ஜ் இருக்கக் கூடாது. தலையில் பூ வைக்கக் கூடாது.

காலணிகள் குறைந்த உயரம் கொண்டவையாக இருக்க வேண்டும். சாண்டல் செருப்புகளை அணியலாம். ஷூ அணியக் கூடாது.

எந்த தொலைத் தொடர்பு சாதனங்களையும் மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் கொண்டு வரக் கூடாது.

ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பை, பெல்ட், தொப்பி, நகைகள், கைக்கடிகாரம் உள்ளிட்ட எந்த உலோகத்தால் ஆன பொருட்களையும் மாணவ, மாணவிகள் கொண்டு வரக் கூடாது. இதன்படி, மாணவிகள் கம்மல், மோதிரம் என எந்த ஆபரணங்களையும் அணிந்து வர வேண்டாம் என்பது தெளிவாகிறது.

மாணவ, மாணவிகளின் பொருட்களை பாதுகாப்பாக வைக்க தேர்வு மையத்தில் எந்த வசதியும் செய்து தரப்பட மாட்டாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இது தவிர கடந்த ஆண்டு கிடைத்த அனுபவத்தில் இருந்து நாம் சில விஷயங்களை தெரிந்து கொண்டோம். 

அதாவது, ஜீன்ஸ், சில உள்ளாடைகளில் இருக்கும் இரும்பு கொக்கி அல்லது பட்டன்களாலும் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்டதால், இந்த ஆண்டு தேர்வெழுதுவோர் அதற்கேற்ப ஆடைகளையும், உள்ளாடைகளையும் பயன்படுத்தலாம்.

தலையில் உலோகத்தால் ஆன க்ளிப், ஹேர்பேண்ட் போன்றவற்றையும், பின் எனப்படும் ஊக்குகளையும் மாணவிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

தேர்வு அறைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே சென்று விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com