நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சொராபுதீன் ஷேக், போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா திடீரென மரணமடைந்தது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அந்த தீர்ப்பில், நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை. இது குறித்து தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணை தொடரும். சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோருவது, நீதிமன்றத்தின் உண்மைத் தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. நீதித் துறைக்கு எதிரானது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி, நாக்பூரில் நடைபெற்ற தன்னுடன் பணியாற்றுபவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

குஜராத்தில் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்தவர் சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா. இந்த வழக்கில் பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய நபர்கள் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.  இதுபோன்ற முக்கிய வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா திடீரென மரணமடைந்தது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுப்பப்பட்டது.

85 வயதாகும் லோயாவின் தந்தை இப்போதுவரை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். மேலும் லோயாவுக்கு எந்த நோயும் கிடையாது. எனவே அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மும்பை வழக்குரைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் 16-ஆம் தேதி தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று அளித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் நீதி விசாரணை தேவையில்லை என்று மகாராஷ்டிர மாநில அரசு வாதாடியது. ஒரு தனிநபரை (அமித் ஷா) குறிவைத்து, வேண்டும் என்றே நீதிபதி லோயா மரணத்தில் நீதி விசாரணை கோரி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தெரிவித்தது.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து இந்த விவாகரம் தொடர்பாக மனு அளித்தனர். அதில், லோயாவின் திடீர் மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com