இந்திய வரலாற்றில் துயரமான நாள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கருத்து

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணை கோரி தொடுக்கப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணை கோரி தொடுக்கப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்திய வரலாற்றில் துயரமான நாள் இது எனக் குறிப்பிட்டுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
இன்றைய நாள், இந்திய வரலாற்றில் துயரமான நாள் ஆகும். நீதிபதி லோயா சந்தேகத்துக்குரிய சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார். அதுகுறித்து விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்திய நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு இது கவலை தரும் விஷயமாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் முழுவதும் கைக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருப்போரின் மனதில் இந்த விவகாரத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன என்றார் சுர்ஜேவாலா. அப்போது வழக்குத் தொடர்பாக 10 கேள்விகளையும் அவர் எழுப்பினார். மேலும், விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே குற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து முடிவுக்கு வர முடியும்; ஆனால் இதுவரையில் லோயா மரணம் குறித்து விசாரணையே நடத்தப்படவில்லை என்றும் சுர்ஜேவாலா குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக மக்கள் நீதிமன்றத்தை காங்கிரஸ் அணுகியது; குடியரசுத் தலைவரை 14 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சென்று சந்தித்து காங்கிரஸ் முறையிட்டது. பாஜக விரக்தியிலும், நடுக்கத்திலும் இருக்கிறது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக திரித்து கூறும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜகவின் குற்றச்சாட்டை நிராகரிப்பதுடன், அதை எங்கள் கட்சி கடுமையாகவும் கண்டிக்கிறது' என்றார் சுர்ஜேவாலா.
காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் பல கேள்விகளை எழுப்புவதாகவும், பல கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் விடைகள் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com