இனிமேல் எங்களால் என்ன செய்ய முடியும்?: மறைந்த நீதிபதி லோயாவின் சகோதரர் வேதனை! 

நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீப்புக்குப் பிறகு, இனிமேல் எங்களால் என்ன செய்ய முடியும் என்று நீதிபதி லோயாவின் சகோதரர் வேதனை தெரிவித்துளார்.
இனிமேல் எங்களால் என்ன செய்ய முடியும்?: மறைந்த நீதிபதி லோயாவின் சகோதரர் வேதனை! 

புதுதில்லி: நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீப்புக்குப் பிறகு, இனிமேல் எங்களால் என்ன செய்ய முடியும் என்று நீதிபதி லோயாவின் சகோதரர் வேதனை தெரிவித்துளார்.

குஜராத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌஸர் பி, நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் சம்பவமானது போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை, பின்னர், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, ராஜஸ்தான் வர்த்தகர் விமல் பத்னி, குஜராத் மாநில காவல்துறை முன்னாள் தலைவர் பி.சி. பாண்டே, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் கீதா ஜோரி, காவல்துறை அதிகாரிகள் அபய் சூடசாமா, என்.கே. அமின் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் அனைவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஹெச். லோயா, தனது நண்பரது மகளின் திருமண நிகழ்ச்சிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து வந்த லோயா திடீரென மரணமடைந்தது அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகி தெஹ்சீன் புனாவாலா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பி.எஸ். லோனே ஆகியோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. அவர்கள் நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவை வியாழக்கிழமை அன்று பிறப்பித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் தெரிவித்திருந்த கருத்துகளை அடிப்படையாக வைத்து, நீதிபதி லோயா மரணம் குறித்து சந்தேகம் கொள்வதற்கு எந்தவித காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், மீளாய்வு முடிவுகள், இயற்கையாகத்தான் நீதிபதி லோயா மரணமடைந்தார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில் இருந்து, நீதித்துறையின் சுதந்திரத்தன்மை மீது வெளிப்படையாகத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. தனிப்பட்ட பகைமைக்கு பழிதீர்த்து கொள்ளும் எண்ணத்துடன், அற்பத்தனமான, உள்நோக்கத்துடனும் இந்த பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதித்துறைக்கு மறைமுகமாக அவப்பெயர் ஏற்படுத்தும் எண்ணத்துடனும், நீதித்துறை அமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலும் மனுதாரர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது; நீதித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவும், நீதித்துறை அலுவலில் தடையை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. நீதிபதி லோயா மரணம் தொடர்பாக தொடுக்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதான விசாரணையும், இந்த உத்தரவின் மூலம் முடித்து வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீப்புக்குப் பிறகு, இனிமேல் எங்களால் என்ன செய்ய முடியும் என்று நீதிபதி லோயாவின் சகோதரர் வேதனை தெரிவித்துளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக நீதிபதி லோயாவின் சகோதரர் ஸ்ரீநிவாஸ் லோயாவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அப்பொழுது அவர் கூறியதாவது:

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியதையும் குறித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் எங்கள் நிலைப்பாடு என்ன? நாங்கள் சிறிய மனிதர்கள். இப்போது இது குறித்து எதுவும் பேசாமல் இருப்பதுதான் சிறந்தது. இனிமேல் எங்களால் என்ன செய்ய முடியும்? எது செய்தாலும் அது விரயம்தான்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com