உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி,
உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, மனித உரிமைகள் ஆர்வலரும், வழக்குரைஞருமான இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டிலும், சர்வதேச அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரையும் சிறந்த தலைவர்களாக கெளரவித்து ஃபார்ச்சூன் பத்திரிகை பாராட்டி வருகிறது. அந்த வகையில் 2018-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலை அந்த பத்திரிகை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், இந்திரா ஜெய்சிங்குக்கு 20-ஆவது இடமும், முகேஷ் அம்பானிக்கு 24-ஆவது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் ஏழைகளின் குரலாக இந்திரா ஜெய்சிங் ஒலித்து வருகிறார். அநீதிக்கு எதிரான போராட்டத்தில் தனது வாழ்க்கையையே அவர் அர்ப்பணித்துள்ளார் என்று ஃபார்ச்சூன் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது. போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சட்டப் போராட்டம் நடத்தியது, சிரியன் கிறிஸ்தவப் பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக சொத்துரிமை பெற்றுக் கொடுத்தது ஆகியவை அவரது முக்கியப் பங்களிப்பாகும்.
முகேஷ் அம்பானியைப் பொறுத்த வரையில், மிகக்குறுகிய காலகட்டத்தில் ஜியோ நிறுவனம் மூலம் இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகக்குறைந்த கட்டணத்தில் செல்லிடப்பேசி சேவையைக் கிடைக்கச் செய்தார் என்று ஃபார்ச்சூன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் ஏழைகளுக்கான கட்டடக் கலைஞர் என்று புகழப்படும் கட்டுமான நிபுணர் பாலகிருஷ்ண தோஸி இப்பட்டியலில் 43-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவில் சுமார் 80,000 ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் வீட்டு வசதி அளித்த பெருமைக்குரியவர் என்று அவரை ஃபார்ச்சூன் பத்திரிகை புகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்த பள்ளி மாணவர்கள் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், சமூக சேவையில் இறங்கியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவரது மனைவி மிலின்டா கேட்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க நபர்கள் ஆவர்.
இப்பட்டியலில் கடந்த 2015-இல் பிரதமர் மோடி, 2016-இல் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், 2017-இல் பாரத ஸ்டேட் வங்கி தலைவராக இருந்த அருந்ததி பட்டாச்சார்யா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com