உ.பி.யில் பள்ளிப் பேருந்து - ரயில் மோதி 13 சிறார்கள் பலி: துயர சம்பவம் நிகழ்ந்தது எப்படி?

உத்தரப்பிரதே மாநிலம் குஷிநகரில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் பள்ளிச் சிறார்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து மீது ரயில் மோதியதில் 13 சிறார்கள் பலியாகினர்.
உ.பி.யில் பள்ளிப் பேருந்து - ரயில் மோதி 13 சிறார்கள் பலி: துயர சம்பவம் நிகழ்ந்தது எப்படி?


லக்னௌ: உத்தரப்பிரதே மாநிலம் குஷிநகரில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் பள்ளிச் சிறார்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து மீது ரயில் மோதியதில் 13 சிறார்கள் பலியாகினர்.

கோராக்பூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள குஷிநகரில் இன்று காலை 7 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் 8 சிறார்கள் காயமடைந்தனர்.

டிவைன் மிஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து இந்த விபத்தில் சிக்கியது. இதில் பள்ளிப் பேருந்து ஓட்டுநரும் பலியானார்.

பேஹ்புர்வா பகுதியில் உள்ளது ஆளில்லா லெவல் கிராசிங் என்பதால் தன்னார்வலர்கள் சிலர் பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் பள்ளிப் பேருந்தை நிறுத்த முயன்றும், அவர்களைக் கடந்து பேருந்து சென்று விட்டதால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி தனது இரங்கலை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் குஷி நகரில் நடந்த விபத்தில் பள்ளிச் சிறார்கள் பலியான சம்பவம் குறித்து அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். உத்தரப்பிரதேச அரசும், ரயில்வே துறையும் உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்று மோடி கூறியுள்ளார்.

மீட்பு ரயில் உடனடியாக கோரக்பூரில் இருந்து கிளம்பி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கவும், உரிய விசாரணை நடத்தவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அவர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, தாவே-கபடகஞ்ச் பயணிகள் ரயில் சிவானில் இருந்து கோரக்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த தண்டவாளத்துக்கு அருகே 20 பள்ளிச் சிறார்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டுள்ளனர். ஆனால், அதற்குள் பேருந்து தண்டவளாத்தை அடைந்து இந்த விபத்து நிகழ்ந்து விட்டதாகக் கூறுகிறார்கள்.

விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

பள்ளிச் சிறார்கள் இறந்த விபத்து குறித்து செய்தி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com