சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை; மேலும் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு (77) ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் எஸ்சி, எஸ்.டி, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை; மேலும் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு (77) ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் எஸ்சி, எஸ்.டி, சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
 இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷில்பா, சரத் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் தொடர்புடைய பிரகாஷ், சிவா ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு: கடந்த 2013-ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கிப்படித்து வந்த 16 வயது சிறுமியை ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைமறைவான ஆசாராமை, சில நாள்களிலேயே இந்தூரில் போலீஸார் கைது செய்தனர். அவருக்கு பல்வேறு வகையில் உதவியதாக ஷில்பா, சரத், பிரகாஷ், சிவா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம் (போஸ்கோ) , சிறார் நீதிச் சட்டம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனையியல் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 ஆசிரமத்தில் தங்கிப் படித்த சிறுமி: கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆசாராம் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கோரி 12 முறை பல்வேறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. 2013 நவம்பரில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரில், "ஜோத்பூர் அருகேயுள்ள மனாய் பகுதியில் உள்ள ஆசிரமத்துக்கு தன்னை வரச் சொன்ன ஆசாராம் பாபு, 2013 ஆகஸ்ட் 15-ஆம் தேதி இரவு தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்' என்று குற்றம்சாட்டி இருந்தார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இச்சிறுமி மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் உள்ள ஆசாராமின் ஆசிரமத்தில் தங்கிப் படித்து வந்தார். பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்துடன்தான் அச்சிறுமியை ஜோத்பூருக்கு ஆசாராம் வரவைத்துள்ளார் என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
 இருவர் விடுவிப்பு: இந்த குற்ற வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு பல்வேறு வகையில் உதவிய ஷில்பா, சரத் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், குற்றம்சாட்டப்பட்ட மேலும் இருவரான பிரகாஷ், சிவா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
 "ஆசாராம் தனது மரணம் வரையில் சிறையில்தான் இருக்க வேண்டும். மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் சாமியார் அல்ல; பாலியல் சதியை திட்டமிட்டு நடத்தியவர்' என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆசாராமுக்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான சொத்துகளும், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் 400 ஆசிரமங்களும் உள்ளன.
 நீதி கிடைத்துள்ளது...: "கடந்த 5 ஆண்டுகளாக வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சமாக இருந்தது. இப்போது, எனது மகளுக்கு உரிய நீதி கிடைத்துள்ளது. ஆசாராம் சிறையில் இருந்து இனி வெளியே வர முடியாது என்பது நிம்மதி தரும் தீர்ப்பாக உள்ளது. ' என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
 குற்றச்சாட்டுகள் நிரூபணம்
 வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், புதன்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என்று ஜோத்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மதுசூதன் சர்மா அறிவித்தார். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில், ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறையிலேயே தீர்ப்பை வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை காலை சிறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அறையில் நீதிபதி முன்பு ஆசாராம் பாபுவும் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நால்வரும் ஆஜர்படுத்தப்பட்டனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் அத்துமீறல் உள்பட ஆசாராம் பாபு மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என்று நீதிபதி முதலில் அறிவித்தார். இதையடுத்து, பிற்பகலில் அவருக்கான தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி, ஆயுள் முழுவதும் ஆசாராம் பாபு சிறையில் இருக்க வேண்டும் என்று அறிவித்தார்.
 பலத்த பாதுகாப்பு
 ஆசாராம் வழக்கில் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு ஜோத்பூர் உள்பட ராஜஸ்தான் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தவிர, ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்னை ஏற்படாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அந்த மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. தீர்ப்பு வெளியானதை அடுத்து எந்தப் பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
 நாட்டில் கடந்த ஓராண்டுக்குள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார்கள் தண்டனை பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் அவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது, அப்போது ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். பொதுச் சொத்துகள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com